

குஜராத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட்-19க்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். 2வது நாளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குஜராத்தில் நேற்றைய தகவலின்படி 5 பேர் உயிரிழந்த நிலையில், இன்றும் 5 பேர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது:
''2-வது நாளாக இறப்பு அதிகரித்துள்ள நிலையில் குஜராத்தில் கரோனா வைரஸுக்குப் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு கடைசியாக ஏற்பட்ட ஐந்து இறப்புகளில், நான்கு பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் சூரத்தில் உயிரிழந்தார். இறந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள்.
மாநிலத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநிலத்தில் மொத்தம் 1,604 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் இதுவரை 94 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் அகமதாபாத்தும் ஒன்று. இங்கு ஒரேநாளில் 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நகரத்தில் கரோனாவுக்கு மொத்தம் 1,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரில் 29 பேர் இறந்துள்ளனர், 27 பேர் மீண்டுள்ளனர்''.
இவ்வாறு குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.