இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது; ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்.
Updated on
2 min read

இதயமற்ற அரசுதான் மக்களுக்கு ஒன்றும் செய்யாது. ஏழைகளுக்கு உடனடியாகப் பணத்தை வழங்கி, உணவு தானியங்களை இலவசமாக வழங்குங்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்.

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருப்பினும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் முதல் கட்டமாக 21 நாட்கள் லாக் டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்திய நிலையில் 2-வது கட்டமாக மே 3-ம் தேதி வரை லாக்டவுனை செயல்படுத்தி வருகிறது.

இந்த லாக் டவுன் காலத்தில் ஏழை மக்கள், கூலித்தொழிலாளிகளில், சாலைகளில் விற்பனை செய்து பிழைப்பு நடத்துபவர்கள், நடைபாதை வியாபாரிகள் என பலரும் வருமானமில்லாமல் துன்பப்படுகிறார்கள். கையிலிருக்கும் சேமிப்பு கரைந்து கடனுக்காக அலைகிறார்கள்.

அவர்களுக்கு நிதியுதவி வழங்க கடந்த மாதம் 1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவி்த்தது. ஆனால், இன்னும் பலருக்கும் அரசின் உதவி சென்று சேராததால், இலவச உணவு வழங்குமிடங்களில் வரிசையில் நிற்கிறார்கள்.

ஏழைகளுக்கு உடனடியாக அரசு நிதியுதவி வழங்க வேண்டும், அவர்களின் கைகளில் பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் ப.சிதம்பரம் இன்று பதிவிட்ட கருத்தில் அவர் வலியுறுத்தியிருப்பதாவது.

ஏழை மக்கள் கைகளில் பணம் இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் இலவசமாகக் கிடைக்கும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக நாள்தோறும் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன.

இதயமில்லாத அரசுதான் ஏழை மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் நிற்கும். ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் பணத்தைப் பரிமாற்றம் செய்து அவர்களின் மதிப்பைப் பாதுகாத்து அவர்களைப் பட்டினியிலிருந்து அரசால் பாதுகாக்க முடியாதா?

இந்திய உணவுக் கழகத்தில் 7.7 கோடி டன் உணவு தானியங்கள் இருப்பு இருக்கிறதே? அதில் சிறிதளவு எடுத்து தேவைப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக ஏன் அரசாால் வழங்க முடியாது?

நான் எழுப்பிய இந்த இரு கேள்விகளும் பொருளாதார, அறம் சார்ந்த கேள்விகள். நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் இருவரும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தோல்வி அடைந்துவிட்டார்கள். உதவியின்றி வாடுவோரை தேசம் பார்த்து வருகிறது.

நாடு முழுவதும் லாக் டவுனால் வேலைவாய்ப்பு பறிபோய் வாழ்வதற்கு வழியின்றி சிரமப்படும் ஏழை மக்களுக்கு பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யுங்கள்''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமத்துக்குச் செல்ல முடியாமல் பல்வேறு மாநில எல்லைகளில் தங்கி இருக்கிறார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் பல இடங்களில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in