

கரோனாவை கண்டு யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள போதுமான உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளதாக கூறி ட்விட்டர் செய்து இருந்தார்.
இந்தநிலையில் பாஸ்வானின் ட்வீட்டை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி ‘‘கரோனாவை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். ஒன்றாக இருந்து கரோனா தொற்றை தோற்கடிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.