Published : 18 Apr 2020 04:56 PM
Last Updated : 18 Apr 2020 04:56 PM

கரோனா; அனைத்து அஞ்சல்துறை ஊழியர்களுக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு

அனைத்து அஞ்சலக ஊழியர்களும் அவர்கள் பணியில் இருக்கும் போது நோய்த்தொற்றுக்கு ஆளானால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறையின் அறிவிப்புபடி அஞ்சல்துறையானது இன்றியமையாத சேவைகளின் கீழ் வருகிறது என்பதை உறுதி செய்கிறது. கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு தபால்களை விநியோகிப்பது, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு. AePS வசதியின் கீழ் எந்த வங்கியில் இருந்தும் எந்தக் கிளையில் இருந்தும் ஒருவர் தனது வீட்டில் இருந்தபடியே பணம் எடுத்துக் கொள்ளுதல் என பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர்.

இதனோடு கூடுதலாக, கோவிட்-19 கிட், உணவுப் பொட்டலங்கள், ரேஷன் பொருள்கள் மற்றும் அத்தியாவசியமான மருந்துப் பொருள்களை உள்ளூரில் உள்ள மாநில நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து அஞ்சல் அலுவலகம் நாடு முழுவதும் விநியோகித்து வருகிறது. இவ்வாறு அஞ்சல்துறை தனது அலுவலகப் பணிகளோடு கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் சமூகத் தேவைக்காகவும் சேவை ஆற்றுகிறது.

கோவிட்-19 நெருக்கடி நிலவும் இந்தச் சூழலில், கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலக ஊழியர்களும் அவர்கள் பணியில் இருக்கும் போது நோய்த்தொற்றுக்கு ஆளானால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 இலட்சம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் உடனடியாக வெளியிடப் படுவதோடு, கோவிட்-19 நெருக்கடியான சூழல் முடியும் வரை இது தொடரும்.
இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x