

டெல்லி தப்லீக் ஜமாத்தின் மாநாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலரும் பங்கேற்றதாக தகவல் கிடைத்திருப்பதால், மாநிலஅரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகமும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரோஹிங்கியா மக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறைஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் மதவழிபாடு மாநாடு நடந்தது.இதில் 9 ஆயரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர். அதன்பின் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டபோது தப்லீக் ஜமாத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்ததைக் கண்டு போலீஸாரும், மருத்துவர்களும் வெளியேற்றினர்
அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பலருக்கும் கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது, பலருக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, நாடுமுழுவதும் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகி்ன்றனர். இ்ந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த சூழலில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் சட்டவரம்பு எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் ரோஹிங்யா மக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது
இதுதொடர்பாக மாநில தலைைமச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத்தில் நடந்த மதவழிபாடு மாநாட்டில் பல ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்கேற்றதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள்மூலம் மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து அதிகரிக்கும்.
ஹைதராபாத்தில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் ஹரியாணாவில் உள்ள மேவாத் நகரில் நடந்த மாநாட்டுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கும் சென்றுள்ளா்கள்.
இதேபோல டெல்லி ஷரம் விஹார், ஷாகீன் பாக் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ரோஹிங்யா மக்களும் தப்லீக் ஜமாத்தில் கூட்டத்தில் பங்கேற்று இன்னும் தங்கள் முகாமுக்கு வரவில்லை. மேலும் தேராபாஸி, பஞ்சாப் ஜம்மு ஆகிய பகுதிகளில் விசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் தப்லீக்ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள்.
ஆதலால், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் அவர்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஆதலால், மாநிலஅரசுகள் தங்கள் எல்லைக்குள் இருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களை கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்துக்கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஹைதராபாத், டெல்லி,ஜம்மு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 40 ஆயிரம் ரோஹிங்யா மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது