

சில மருத்துவமனைகளில் கரோனா அல்லாத சில நோயாளிகள் திருப்பியனுப்பப்படுவதாக புகார்கள் வருகின்றன, அத்தகைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய சுகாதாரத் துறை ஹர்ஷ வர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கரோனா முன்னெச்சரிக்கை பணி தொடர்பாக நடந்த கூட்டத்திற்கு தலைமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமை வகித்தார். இதில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் முக்கிய மத்திய மற்றும் நகர அரசு மருத்துவமனைகளின் மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் டெல்லி நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் ஹர்ஷ வர்தன் கூறியதாவது:
கோவிட் தவிர பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மறுப்பது குறித்து புகார்கள் வருகின்றன.
அவசர காலங்களில் சிகிச்சைபெறுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் இன்று பல மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற ஒரு அக்கறை எல்லோருக்கும் வேண்டும். உடனடி மருத்துவம் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் எங்கேதான் செல்வார்கள். ஒன்றன்பின் ஒன்றாக மருத்துவமனைகள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் அவர்கள் தங்கள் உயிரையே இழக்கும் நிலைகூட ஏற்படலாம்.
இது அனைவருக்கும் சோதனையான ஒரு நேரம். உண்மையில் கோவிட் 19 அல்லாத நோய்கள் பாதிக்கப்பட்டவர்களையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு தேவையான அவசர மருத்துவ சிகிச்சைக்காக உரிய மருத்துவமனையை தேடி அடைவதற்கு மிகுந்த சிரமப்படுவதையும் நாம் காண்கிறோம்.
தயவுசெய்து நோயாளிகளை அலைய விடாதீர்கள், மிகவும் அவசர நிலையில் உள்ள அத்தகைய நோயாளிகள் ரத்தமாற்றம், டயாலிசிஸ் போன்ற சில நடைமுறைகள் ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி காத்திருக்க முடியாது என்பதால் நாம் அவர்களை எந்தவிதமான மோசமான சாக்குப்போக்கிலும் திருப்பி அனுப்பி விடக்கூடாது.
உடனடி கவனம் தேவைப்படும் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனைகளில் இருந்து விலகிச் சென்றால் சுகாதாரப் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கும் கோவிட் அல்லாத நோயாளிகளையும் முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.