

கடந்த மார்ச் 31-ல் டெல்லி மர்கஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் தமிழர்களுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதிசெய்யப்பட்ட சுமார் 100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவர, மற்றவர்கள் டெல்லியின் வேறு பல இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். இக்காலக்கட்டம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதே கூட்டத்துக்கு வந்து தமிழகம் திரும்பியவர்களில் பலரும் அங்கு தனிமை காலம் முடிந்து 2 நாட்களாக வீடுதிரும்பி வருகின்றனர். அவர்களுக்கு முன்பாக தனிமைக்கு உள்ளாகி அது முடிந்ததால் தங்களையும் வீடு சேர உதவும்படி தமிழக அரசிடம் கோரியுள்ளனர். இந்தப் பட்டியலில் சுமார் 500 தமிழர்கள் டெல்லியின் நரேலாவில் ஒரு அறை, ஹால் கொண்ட அடுக்குமாடி வீடுகளில் இருவர் எனத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள புத்தாநத்தம் கிராமத்தை சேர்ந்த முகம்மது ஹனிபா (44) ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தொலைபேசியில் கூறும்போது, “உணவு மற்றும் பொருட்கள் வாங்க கீழ்பகுதிக்கு செல்லும் போது மற்றதமிழர்களுடன் தொலைவில் இருந்தபடி பேச முடிகிறது. அனைவரும் நலமுடன் இருக்கும்நிலையில் நாங்கள் வீடு திரும்புவது குறித்த தகவல் தெரிந்தால்எங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நிம்மதியாக இருக்கும்.
முதியவர்களுக்கு பல்வேறுபிரச்சினைகளால் மனச்சோர்வும், வெறுப்பும் உருவாகத் தொடங்கி உள்ளது. எனவே, எங்களை வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உதவ வேண்டும். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் என எவரையும் உதவிக்காகத் தொடர்புகொள்ள முடியவில்லை. மற்ற மாநிலத்தவர்களை போல எங்கள் நிலையையும் அறிய டெல்லி காவல் துறையிடம் தமிழக அரசு பேச வேண்
டும்” என்றனர்.
சில தினங்களில் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ளது. இதை கடைப்பிடிக்க தற்போது கிடைக்கும் சுமாரான உணவு போதாது எனவும் அவர்கள் புலம்புகின்றனர். இதுபோன்ற புகார்களுக்காக டெல்லி அரசு அளித்த 'ஹெல்ப்லைன்' எண்களும் சில நாட்களாக செயல்படாமல் இருப்பதாகவும், அப்பகுதியில் இருக்கும் அசுத்தங்களால் கொசு உள்ளிட்ட தொல்லைகளும் அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதேபோல, ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் தைராய்டு நோய்களுக்கான மருந்துகள் கிடைப்பதில் சற்று சிரமம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
டெல்லி வந்தவர்களில், மகளிருக்கான ஜமாத் பணிக்காக சுமார் 50 பெண்களும் தங்கள் குடும்பத்துடன் இடம் பெற்றுள்ளனர். இவர்
களும் நரேலாவில் குடும்பவாரியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே பணிக்காக தமிழகத்தில் இருந்து வந்தவர்களில் உத்
தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களின் நகரங்களிலும் சிக்கி அவதியுறும் சூழல் நிலவுகிறது.