

காஷ்மீரில் இன்று காலை முதல் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உலகமே கரோனா அச்சத்தில் கலக்கத்தில் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் இந்திய எல்லையை சீண்டிப் பார்க்கும் பணிகளில் மும்முரமாக இருந்து வருகின்றனர்.
இன்று காலை ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை குறித்து காஷ்மீரைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
''ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டடனர்..
தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் என்ற டைரூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் இன்று காலையில் சுற்றி வளைக்கப்பட்டனர். எனினும் தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை அடுத்து இந்தத் தேடல் நடவடிக்கை ஒரு என்கவுன்ட்டராக மாறியது.
அடுத்தடுத்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் அடையாளம் மற்றும் எந்த தீவிரவாதிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது''.
இவ்வாறு காஷ்மீர் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.