Last Updated : 17 Apr, 2020 02:10 PM

 

Published : 17 Apr 2020 02:10 PM
Last Updated : 17 Apr 2020 02:10 PM

167 ஆண்டுகளில் முதல் முறை: பிறந்த நாளில் பயணிகளின்றி ஓய்வெடுத்த இந்திய ரயில்வே

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட 167 ஆண்டுகளில் முதல் முறையாக தனது பிறந்த நாளன்று, எந்தவிதமான பயணிகளையும் ஏற்றிக்கொண்டு செல்லாமல் ரயில்கள் முதல் முறையாக நேற்று ஓய்வெடுத்தன.

சரக்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முதன்முதலாக பயணிகள் ரயில் இயக்கப்பட்ட நாள் நேற்றுதான். கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மாலை சரியாக 3.35 மணிக்கு மும்பையின் போரி பந்தர் ரயில் நிலையத்திலிருந்து தானேவுக்கு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

மும்பையில் பிரதான ரயில் நிலையமான சிஎஸ்டி ரயில் நிலையத்தின் முந்தைய பெயர்தான் போரி பந்தர் ரயில் நிலையம்.

கரோனா வைரஸ் பரவுவதை் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்துப் பயணிகள் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 23 நாட்களாக இந்தியாவில் 12 ஆயிரம் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று பயணிகள் ரயில் நாட்டில் இயக்கப்பட்ட 167-வது ஆண்டு விழா நேற்று வந்தாலும் ரயில்கள் ஏதும் இயக்கப்படாததால் எந்த விதமான கொண்டாட்டமும் இன்றி முதன்முதலாக முடங்கின. இதற்கு முன் பயணிகள் ரயில் போக்குவரத்து தனது பிறந்த நாளில் ஒருநாளும் பயணிக்காமல் இருந்ததில்லை. 167 ஆண்டுகளில் முதல் முறையாக தனது பிறந்த நாளில் பயணிகள் ரயில் சேவை இந்த ஆண்டுதான் முடங்கியது.

முதன்முதலாக இயக்கப்பட்ட ரயில்- படம் தி இந்து

இதற்கு முன் கடந்த 1974-ம் ஆண்டு மே மாதம் ரயில்வே சார்பில் ஊழியர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தம் செய்தார்கள். அப்போது 3 வாரங்கள் நாடு முழுவதும் எந்தவிதமான ரயில் போக்குவரத்தும் நடக்கவில்லை.

பயணிகள் ரயில் போக்குவரத்தின் 167-வது ஆண்டு விழாவான நேற்று ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ஒருபோதும் நிற்காத சக்கரங்களின் முதல் பயணம் மும்பைக்கும் தானேவுக்கும் இன்றுதான் தொடங்கியது. இன்றோடு பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 167 ஆண்டுகளாகிவிட்டன. பயணிகளின் நலனுக்காக முதல் முறையாக பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளே இருங்கள், தேசத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மாலை சரியாக 3.35 மணிக்கு மும்பையின் போரி பந்தர் ரயில் நிலையத்திலிருந்து தானேவுக்கு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. 38 கிலோ மீட்டர் கொண்ட இந்தத் தொலைவை கடக்க 57 நிமிடங்கள் ரயிலுக்குத் தேவைப்பட்டது.

அப்போது சாஹிப், சிந்து, சுல்தாந் ஆகிய மூன்று நீராவி ரயில் இன்ஜின்களும், 400 பேர் அமர்ந்து செல்லக்கூடிய 14 பெட்டிகளும் தயாரிக்கப்பட்டன. அப்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ஜேம்ஸ் ஆன்ட்ரூ பிரவுன், லார்ட் டல் ஹவுசி ஆகியோர் நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

இந்த 167 ஆண்டுகளில் ரயில்வே பல வரலாற்றுச் சம்பவங்களைப் பார்த்து ஜீரணித்துப் பயணித்து வருகிறது. கடந்த 1857-ம் ஆண்டு முதல் சிப்பாய் கலகம், 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை முதல் உலகப்போர்,1939-45 வரை 2-ம் உலகப்போர், 1947, ஆகஸ்ட் 15-ல் தேசத்தின் சுதந்திரம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டது.

முதன்முதலில் ரயில் இயக்கப்பட்ட மும்பையின் போரி பந்தர் ரயில் நிலையம் தான் பிற்காலத்தில் விக்டோரியா டெர்மினஸ் என யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றது. இப்போது சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x