

கேரளத்தின் திருச்சூர் மாநகரின் மூலை முடுக்கெல்லாம் பயணிக்கிறது அந்த புல்லட் படை. புல்லட் ஓட்ட பிரத்யேகப் பயிற்சி எடுத்துக்கொண்ட பெண் போலீஸார் இந்தப் படையில் துடிப்புடன் இயங்குகிறார்கள். ஊரடங்கு காலத்தில் எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காக இவர்கள் புல்லட்டில் சிட்டாய் பறக்கின்றனர். திருச்சூர் மாநகரக் காவல் கண்காணிப்பாளர் ஆதித்யாவின் கனவுத்திட்டம்தான் இது.
கரோனா, ஊரடங்குக்கெல்லாம் முன்பே திருச்சூரில் புல்லட் பெண் காவல் படை திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதற்கென்று மாநகர ஆளுகைக்கு கீழ் இருக்கும் காவல் நிலையங்களில் இருந்து 16 பெண் போலீஸாரைக் கொண்டு பிரத்யேகமான படை உருவாக்கப்பட்டது. அது செயல்பாட்டுக்கு வரும் முன்பே கரோனா காரணமாக ஊரடங்கு வந்துவிட, தொடக்க விழா எதுவும் இன்றி அவசரம் கருதி உடனே செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது இந்த பெண் போலீஸ் புல்லட் படை.
இப்போது திருச்சூரில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும் பணி இந்த புல்லட் படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முகாமுக்குச் சென்ற போலீஸாரிடம், முகாமிலேயே சதாசர்வ காலமும் இருப்பதால் நேரம் போகாமல் சிரமப்படுவதாகச் சொல்ல, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர் புல்லட் படை போலீஸார்.
இதேபோல், திருச்சூரில் தனிமையில் இருக்கும் முதியோர்களின் பட்டியலைப் பெற்று, அவர்களின் இல்லங்களுக்குத் தேடிப்போய் அத்தியாவசியப் பொருள்கள், மருந்து, மாத்திரைகள் அவர்களிடம் இருக்கிறதா எனவும் விசாரிக்கின்றனர். தேவை இருக்கும் பட்சத்தில் அதையும் வாங்கிக் கொடுத்தும் உதவுகின்றனர்.
இந்தப் படைக்கு தற்போது 5 புல்லட் வாகனமே இருக்கும் நிலையில், இந்த பணியில் இருக்கும் 16 போலீஸாருக்கும் சுழற்சி முறையில் பணி வழங்கப்படுகிறது. இவர்களின் பணிகளை திருச்சூர் பெண்கள் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் பி.வி.சிந்து ஒருங்கிணைக்கிறார்.
அவர் இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், “புல்லட் பெண் போலீஸ் படை திருச்சூர் மாநகரில் இருக்கும் முதியோர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போதைய சூழலில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் உதவி வருகிறோம். தொடக்கத்தில் நாங்களே தேடிப்போய் உதவினோம். இப்போது மருந்து, மாத்திரைகள் வாங்குவது உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மூத்த குடிமக்கள் அவர்களாகவே எங்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி மட்டுமே தினமும் ஐம்பதுக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன” என்றார்.