

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் 30-ம் தேதி வரை ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசிக்க முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அவர்களின் பணத்தை திருப்பி தர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், பக்தர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. முதலில் மார்ச் 31-ம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டது. அதன் பின்னர், ஏப்ரல் 14-ம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மே மாதம் 3-ம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலை சுப்ரபாத சேவை முதற்கொண்டு இரவு ஏகாந்த சேவை வரை தினசரி சேவைகள் மற்றும்வாராந்திர சேவைகள் அனைத்தும் சுவாமிக்கு ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏழுமலையானை பல்வேறு ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசிக்க நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது, தபால் நிலையம், மற்றும் இ-தரிசன மையங்கள் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் மே மாதம் 30-ம் தேதி வரை இவ்வாறு முன் பதிவு செய்தவர்களின் பணத்தைத் திருப்பி தர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆர்ஜித சேவை முன்பதிவு பெற்ற பக்தர்கள், அவர்களின் டிக்கெட் விவரம், வங்கிக் கணக்கின் விவரம் போன்றவற்றை helpdesk@tirumala.org எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், அவர்களின் பணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால், வரும் மே மாதம் 30-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா, தெலங்கானாவில்..
இதனிடையே, ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்று நேற்று மாலை நிலவரப்படி 534 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் நேற்று வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கடப்பா மாவட்டத்தில் டெல்லி மதபிரார்த்தனைக்கு சென்று திரும்பிவந்த 13 பேர் சிகிச்சை பெற்று
குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் தற்போது மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று தெலங்கானா மாநிலத்தில் நேற்று மாலை நிலவரப்படி 650 பேருக்கு கரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் இதுவரை இத்தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.