

ஊரடங்கு காரணமாக தொழில் துறை முடங்கி உள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் 500 ஐடிஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில சிஐடியூ தொழிற்சங்க பொதுச் செயலாளர் தன்பன் சென் கூறும்போது, "பெங்களூருவில் இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறையைச் (ஐடி) சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 496 பேர் வேலையை இழந்துள்ளனர். இதில் சேம்பக் டிசைன் என்ற நிறுவனம் 247 பேரையும், ஃபிளையிங் அவுட் நிறுவனம் 97 பேரையும், மிஸ் டெக் நிறுவனம் 60 பேரையும், ஹூலா இன்போடெயின்மெண்ட் நிறுவனம் 30 பேரையும் பணி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஏராளமான நிறுவனங்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஊதிய குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மார்ச்மாத ஊதியத்தையே வழங்காமல் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் கர்நாடக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சகங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம். மத்திய,மாநில அரசுகள் இந்த விவகாரத்தை உடனடியாக சரி செய்யாவிடில் லட்சக்கணக்கான மக்கள்நேரடியாகவே பாதிக்கப்படுவார்கள்" என்றார். இரா.வினோத்