Published : 17 Apr 2020 07:53 AM
Last Updated : 17 Apr 2020 07:53 AM

டாக்டர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்; உ.பி.யில் வீடுவீடாக சென்று பரிசோதிக்க மருத்துவர்கள் மறுப்பு

மொரதாபாத்

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்தார். அப்பகுதிக்குச் சென்ற மருத்துவப் பணியாளர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினரை வேறு இடத்தில் தனிமைப்படுத்துவதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அப்பகுதி மக்கள், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சுகாதாரப் பணியாளர்களுடன் சென்றிருந்த போலீஸாரையும் தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி காவல் துறையினர், சம்பவஇடத்துக்குச் சென்று கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 7 பெண்கள் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் சங்க உறுப்பினர் சந்தீப் பதோலத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் நோயாளிகளை எந்த நேரமும் பரிசோதிக்கவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தயாராக உள்ளோம். ஆனால், கரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகப்படுபவர்களை வீடுவீடாக சென்று அழைத்து வந்துதனிமைப்படுத்துவது சுகாதார பணியாளர்களின் பணி அல்ல. அதற்கான அதிகாரமும் எங்களுக்கு இல்லை. மாவட்ட நிர்வாகம்தான் அந்தப் பணியை செய்யவேண்டும். குறிப்பாக போலீஸார்தான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

கரோனா வைரஸ் பாதிப்புஇருக்கலாம் என்று சந்தேகப்படுபவர்களை காவல் நிலையத்துக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ அழைத்து வந்தால் அங்கு அவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் பரிசோதனை செய்யவும் சிகிச்சை அளிக்கவும் தயாராக உள்ளனர். மொரதாபாத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு குடும்பத்தினரை அழைத்து வர முயன்ற சுகாதார பணியாளர்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x