

இந்தியாவில் கரோனா பரவல் தொற்று அதிகரிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், மீட்சிக்கான வாய்ப்புகள் ஸ்திரமில்லாத நிலையிலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குநர் சாங் யோங் ரீ தெரிவித்துள்ளார்.
பொருளாதார தேக்க நிலை நிலவிய போதிலும் இந்திய அரசு நாடு முழுவதும் துணிச்சலாக ஊரடங்கை அமல்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ளது. இது அனைத்து துறைகளையும் தீவிரமாக பாதித்துள்ளது. இதனால் 2020-ம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந்திய வளர்ச்சி விகிதம் ஸ்தம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினையால் சர்வதேச அளவிலான வளர்ச்சி விகிதம் 4.7 சதவீத அளவுக்கு இருக்கலாம் என்றும் ஆசிய பிராந்தியத்தில் இது 1.3 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் ஒரு போதும் ஜீரோ அளவில் வளர்ச்சி இருந்ததில்லை என்றும் மற்ற பிராந்தியங்களைக் காட்டிலும் ஆசிய பிராந்தியம் சிறப்பாக செயலாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்போது எடுக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உரிய பலனை அளிக்கும்பட்சத்தில் 2021-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சாத்தியமே என்றும் அவர் தெரிவித்தார்.