Published : 16 Apr 2020 04:54 PM
Last Updated : 16 Apr 2020 04:54 PM

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் எங்களது பணியாளர் அல்ல: டாமினோஸ் நிறுவனம் விளக்கம்

கோப்புப் படம்

டெல்லியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் எங்களது பணியாளர் அல்ல என்று டாமினோஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்புடன் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தெற்கு டெல்லியில் வீடுகளுக்கு பீட்ஸா டெலிவரி செய்த இளைஞருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பலரும் அவர் டாமினோஸ் பீட்ஸா கடையில் பணிபுரிபவர் என்று குறிப்பிட்டார்கள்.

இந்தச் செய்தி தொடர்பாக டாமினோஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறிய கடிதத்தை வெளியிட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த டாமினோஸ் ரசிகர்களே, தென் டெல்லியில் பீட்ஸா டெலிவரி செய்தவருக்கு கரோனா தொற்று இருந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள். வாடிக்கையாளர்களுக்கு முழு தகவல் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் டாமினோஸ் பீட்ஸாவைச் சேர்ந்தவரில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

இந்த நிச்சயமற்ற சூழலில், எங்கள் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். எங்களிடம் இருக்கும் டெலிவரி செய்யும் ஆட்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களே. இவர்கள் அதிகபட்ச சுகாதாரத்தைப் பின்பற்றி, எங்கள் உணவகங்களிலும் அதை முறையாகச் செயல்படுத்துகின்றனர்.

எங்கள் கடைகளில் பணிபுரியும் அத்தனைப் பணியாளர்களுக்கும், தினமும் உடல் வெப்ப அளவு கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மணிநேரமும் குறைந்து 20 நொடிகள் கைகளைக் கழுவுகின்றனர். எங்கள் உணவகங்களோடு சேர்த்து, டெலிவரிக்கான வாகனங்கள், அட்டைப்பெட்டிகள், பீட்ஸாவை வைக்கும் பைகள் என அனைத்தையும் ஒவ்வொரு 4 மணிநேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி வைத்து சுத்தம் செய்கிறோம்.

இதோடு எங்கள் டெலிவரி அனைத்துமே இப்போது வாடிக்கையாளரோடு எந்த விதமான தொடர்பும் இல்லாத, சமூக விலகலைப் பின்பற்றும் டெலிவரியாக மாற்றப்பட்டுள்ளது. எங்கள் பாதுகாப்பு நிபுணர்கள் அனைவரும் கையுறை, முகக் கவசம் ஆகியவற்றை அணிகின்றனர்.

உங்களுக்குப் பிடித்தமான டாமினோஸ் பீட்ஸா உங்களுக்குப் பாதுகாப்பாகக் கிடைக்கத் தேவையான அத்தனை வழிகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்".

இவ்வாறு டாமினோஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x