

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவ ஊழியர்களுக்கு முறையான ஓய்வு அளிக்க, மேற்கு வங்க அரசு ஒரு வாரம் வேலை செய்தபின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு ஏழு நாட்கள் விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் வைரஸ் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 231 கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கிடையில் மருத்துவர்களின் உடல்நலத்தையும் உறுதி செய்து வருகிறது மேற்கு வங்க அரசு. கரோனா நோய்க்கு எதிரான போர் முன்னணியில் ஓயாமல் உழைத்துவரும் மருத்துவர், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு தகுந்த ஓய்வளிக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி முடிவெடுத்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து புதிய முறையை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு மாநில தலைமை செயலாளர் ராஜீவா சின்ஹாவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் மம்தா பானர்ஜி கூறுகையில், "மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களுக்கு ஓய்வு கிடைக்கவில்லை. எனவே இனிமேல் அவர்களுக்கு ஒரு வாரம் வேலை செய்தபின் ஒரு வார ஓய்வு கிடைக்கும். இந்த வாரத்திலிருந்தே தொடங்கும் இந்த முறை அடுத்தடுத்த வாரங்களில் இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து புதிய முறையை செயல்படுத்துமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல காவல் பணியாளர்களின் வேலை நேரத்தையும் குறைக்க முன்முயற்சி எடுக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.'' என்றார்.