Published : 16 Apr 2020 08:01 AM
Last Updated : 16 Apr 2020 08:01 AM

‘ஆரோக்கிய சேது’ பெயரில் மத்திய அரசு வெளியிட்ட செல்போன் செயலி: 13 நாளில் 5 கோடி பேர் பதிவிறக்கம்

ஆரோக்கிய சேது செல்போன் செயலியை கடந்த 13 நாட்களில் 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்தியமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும்தேசிய தகவல் மையம் (என்ஐசி) அண்மையில் ‘ஆரோக்கிய சேது' என்ற பெயரில் செல்போன் செயலியை அறிமுகம் செய்தது. இதனை ஆன்ட்ராய்ட், ஐ-போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செல்போன் செயலி செயல்படுகிறது.

‘ஆரோக்கிய சேது' செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்த பிறகு, உங்களின் செல்போன் எண்,வயது, பாலினம், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.

செல்போனில் பதிவிறக்கம் செய்தபிறகு தங்கள் இருப்பிடம் (ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை இந்த செல்போன் செயலி எச்சரிக்கும்.

தொடர்புக்கு 1075 அவசர எண்

இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கரோனா தொற்றுஉள்ளவர்கள் குறிப்பிட்ட தூரத்தில்நாம் இருந்தோம் என்றால் அது அதிகஆபத்து என எச்சரிக்கும். இதைத் தொடர்ந்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ உதவியை பெற முடியும். அதேபோல் இந்த செயலியில் தற்காப்பு முறை, விழிப்புணர்வு முறைகள் உள்ளன. மேலும் நமக்கு கரோனா தொற்றோ அல்லது கரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது விவரங்களை அரசுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில் 5 கோடி பேர் இதைபதிவிறக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறும்போது, “மிகக் குறைந்த நாட்களில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போன் செயலி இதுதான். 5 கோடி பேரை அடைய தொலைபேசி 75 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ரேடியோ 38 ஆண்டுகளையும், டி.வி. 13 ஆண்டுகளையும், இன்டர்நெட் 4 ஆண்டுகளையும், ஃபேஸ்புக் 19 மாதங்களையும், போகிமான் 19 நாட்களையும் எடுத்துக்கொண்டது. ஆனால் 13 நாட்களிலேயே 5 கோடி பேரை அடைந்துள்ளது ஆரோக்கிய சேது செயலி.

இந்த செயலியை வைத்திருப்பவர்களுக்கு அருகே கரோனாதொற்று உடையவர் இருந்தால்,அது உடனடியாக எச்சரிக்கைசெய்யும். எனவே இதுபொதுமக்களுக்கு அவசியமானது” என்றார்.

மேலும் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அறிய ஹெல்ப்லைன் தொலைபேசி எண்களையும் ஆரோக்கிய சேது வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் கரோனா தொடர்பான விவரங்களை இந்த செயலியில் உள்ள சாட்போட் என்ற பக்கத்தில் சாட் செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் இதுநாள் வரை எத்தனை பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர், சிகிச்சை பெறுவது எத்தனை பேர்போன்ற விவரங்களையும் பெறமுடியும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிக்கும் செய்திகளையும் நேரலையாக பார்க்கமுடியும். எனவே இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள செல்போன் செயலியாக உருமாறியுள்ளது.

இந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள், பதிவு செய்யும் சில தகவல்கள் மற்றும் செல்போன் எண்களைமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வர். அந்தத் தகவல்கள் யாருக்கும் பகிரப்படாது. எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x