Last Updated : 16 Apr, 2020 06:57 AM

 

Published : 16 Apr 2020 06:57 AM
Last Updated : 16 Apr 2020 06:57 AM

டெல்லியில் கரோனா பரவலை தடுக்க போலீஸார் தீவிர முயற்சி; தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை

டெல்லியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தலைநகர போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் தலைமையகம் கடந்தமார்ச் 31-ம் தேதி ‘சீல்’ வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அங்குதங்கியிருந்தவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதலுக்காக உரிய இடங்களில் வைக்கப்பட்டனர். இவர்களில் பலர் ஜமாத் பிரச்சாரத்துக்காக தாங்கள் சந்தித்தவர்களின் பெயரை கூற மறுக்கின்றனர். இதேபோல், டெல்லிமற்றும் அதையொட்டிய அண்டைமாநில மசூதிகளில் தங்கியிருந்தவர்களில் பலரும் உண்மையை மறைக்கின்றனர்.

இதனால் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கும் கரோனா தொற்றுக்கான அபாயம் உள்ளது. எனவே அவர்களை கண்டறியும் முயற்சியில் டெல்லி போலீஸார் தீவிரம் காட்டுகின்றனர். இதில் உண்மையை மறைப்பதாக சந்தேகத்துக்கு உரியவர்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்து பரிசோதிக்கின்றனர். இதன் மூலம், அவர்களை சமீப நாட்களில் நேரில் சந்தித்தவர்கள் யார் என விசாரித்து அறியப்படுகிறது. இவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “இப்பணிக்காகவே ஆய்வாளர்கள் சிலர் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார்200 கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைப்பேசியில் பேசப்பட்டஎண்களை ஒவ்வொன்றாக தொடர்பு கொண்டு அவர்கள் விசாரிக்கின்றனர். இதில் நெருக்கமாக இருந்து மறைக்கப்பட்டவர்களை அழைத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்.

இதனிடையே, டெல்லியில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் உள்ள வெளியூர் ஆட்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் சிலர் தாங்கள் மாநாட்டுக்கு வந்த உண்மையை போலீஸாரிடம் மறைத்துள்ளனர். எனினும், அவர்களது கைப்பேசி சிக்னல் அடிப்படையில் நிஜாமுதீனின் தப்லீக் மாநாட்டில் அவர்கள் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகுஅவர்கள் மீண்டும் தேடிப் பிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேபோன்ற விசாரணையை டெல்லியை சுற்றியுள்ள உ.பி. மற்றும் ஹரியாணா மாநில காவல் துறையும் தொடங்கியுள்ளது. இதற்காக அம்மாநிலங்களில் மசூதிகளில்தங்கியிருந்தவர்களின் கைப்பேசிகள் பறிமுதல் மற்றும் விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணைக்கு பிறகு அனைவரின் கைப்பேசிகளும் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனாவுக்கான சிகிச்சையில் குணம் அடைந்தவர்கள் டெல்லி புறநகர் பகுதிகளில் காலியாக உள்ள அடுக்குமாடி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கான காலம் முடிந்த பிறகு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x