Last Updated : 15 Apr, 2020 09:28 PM

 

Published : 15 Apr 2020 09:28 PM
Last Updated : 15 Apr 2020 09:28 PM

பிரார்த்தனை மட்டும் போதாது; பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்: தலாய் லாமா

தலாய் லாமா

தர்மசலா (இமாச்சல பிரதேசம்)

பிரார்த்தனை மட்டும் போதாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். இந்த வைரஸும் கடந்து போகும் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்தார்.

உலகம் முழுவதும் 20 லட்சம் பேரிடம் பாதிப்பை ஏற்படுத்தி, 1 லட்சத்து 28 ஆயிரம் பேரை பலிகொண்டுள்ள கரோனா வைரஸ் மிகப்பெரிய வரலாற்று சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து இன்று திபெத் அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டு இந்தியாவின் தர்மசாலாவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா நம்பிக்கையோடு தொடர்ந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்த மதத் தலைவரான தலாய் லாமா இன்று கூறியதாவது:

''சில நேரங்களில் நண்பர்கள் என்னிடம் சில மந்திர சக்திகளைப் பயன்படுத்தி உலகில் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு உதவுமாறு கேட்கிறார்கள். என்னிடம் மந்திர சக்திகள் இல்லை என்று நான் எப்போதும் அவர்களுக்குச் சொல்கிறேன். நாம் அனைவரும் ஒரேமாதிரியான மனித குணாதிசயங்கள் கொண்டவர்கள்தான். ஒரேமாதிரியான அச்சங்கள், ஒரேமாதிரியான நம்பிக்கைகள், ஒரேமாதிரியான நிச்சயமற்ற தன்மைகளை நாம் அனைவருமே அனுபவிக்கிறோம்.

வூஹானில் உள்ள கரோனா வைரஸ் பற்றி செய்தி வெளிவந்ததிலிருந்து, சீனாவிலும் மற்ற எல்லா இடங்களிலும் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்காக நான் பிரார்த்தனை செய்து வருகிறேன். இந்த வைரஸிலிருந்து யாரும் தப்பிக்க முடிவதில்லை. உலகப் பொருளாதாரம் மற்றும் நமது சொந்த வீடுகளின் அன்புக்குரியவர்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். ஆனால் பிரார்த்தனை மட்டும் இதற்குப் போதாது.

இதற்கு ஏதாவது தீர்வு கண்டுபிடிக்க முடிந்தால் முயற்சி செய்து பார்ப்போம். இல்லையெனில் உணர்ச்சியற்ற நிலையில் இதனை எதிர்கொள்வோம். இது தானாக நம்மைக் கடந்து போய்விடும். பவுத்த கண்ணோட்டத்தில், ஒவ்வொரு உணர்வும் துன்பம் மற்றும் நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றின் உண்மைகளை அறிந்திருக்கிறது. ஆனால் கோபத்தையும் பீதியையும் பேராசையையும் வெல்ல நம் மனதைப் பயன்படுத்துவதற்கான திறனும் நம்மிடம் உள்ளது என்கிறது பவுத்தம்.

சமீபத்திய ஆண்டுகளில், நான் உணர்ச்சி ஏதுமற்ற நிலையை வலியுறுத்தி வருகிறேன்: பயம் அல்லது ஆத்திரத்தின் குழப்பம் இல்லாமல், விஷயங்களை யதார்த்தமாகவும் தெளிவாகவும் பார்க்க முயன்றாலே தீர்வு புலப்படும். ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருந்தால், அதைக் கண்டுபிடிக்க நாம் உழைக்க வேண்டும்; அவ்வாறு இல்லையென்றால், அதைப் பற்றி சிந்திக்க நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை.

முழு உலகமும் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதாக பவுத்தர்களான நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் நான் பெரும்பாலும் உலகளாவிய பொறுப்பு பற்றிப் பேசுகிறேன். இந்தக் கொடூரமான கரோனா வைரஸின் பாதிப்பு ஒரு நபருக்கு என்ன நடக்கிறது என்பது விரைவில் மற்ற எல்லா உயிரினங்களையும் பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது.

கரோனா வைரஸ் நோயாளிகளைக் காப்பாற்றுவதில் மருத்துவமனைகளில் இரக்கமுள்ள அல்லது ஆக்கபூர்வமான செயல்கள் நடக்கின்றன. மற்றவர்கள் சமூக விலகலைப் பின்பற்றினாலும் பலருக்கு உதவக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

இந்த நெருக்கடி, நாம் அனைவரும் நம்மால் முடிந்த இடத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்ற எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்து நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், பழைய சூழல் திரும்பவும் மருத்துவர்களுடனும் செவிலியர்களுடனும் ஒத்துழைப்போம். அவர்களின் அனுபவ அறிவியலுடன் காட்டும் தைரியத்தை நாம் இணைத்துக்கொள்ள வேண்டும்.

உலகளாவிய ஆரோக்கியத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள கரோனா செய்திகளுடன் தொடர்பிலிருங்கள்.

அச்சம் மிகுந்த இந்த நேரத்தில், முழு உலகத்தின் நீண்டகால சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. நமது நீல கிரகத்தில் உண்மையான எல்லைகள் இல்லை என்பதை விண்வெளியில் இருந்து நம் உலகின் புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே, நாம் அனைவரும் அதைக் கவனித்து, காலநிலை மாற்றம் மற்றும் பிற அழிவு சக்திகளைத் தடுக்க உழைக்க வேண்டும். ஒருங்கிணைந்த, உலகளாவிய பொறுப்புடன் ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே நாம் எதிர்கொள்ளும் முன்னோடியில்லாத சவால்களைச் சந்திப்போம் என்ற எச்சரிக்கையாகவே இந்த கரோனா வைரஸ் தொற்றுநோய் செயல்படுகிறது.

யாரும் துன்பத்திலிருந்து விடுபடவில்லை, அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீடுகள், வளங்கள் அல்லது குடும்பம் இல்லாதவர்களுக்குக் கூட அவர்களைப் பாதுகாக்க மற்றவர்களுக்காக நமது கைகள் நீள வேண்டும்.

ஒருவேளை நாம் வேறு வேறாகப் பிரிந்து வாழ்பவர்கள் என்றாலும் கூட நாம் ஒருவருக்கொருவர் பிரிந்திருக்கவில்லை என்பதையே இந்த வைரஸ் கொடுத்துவரும் நெருக்கடி நமக்குக் காட்டுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்காக கருணையுடன் உதவி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

ஒரு பவுத்தராக, நான் நிலையாமைக் கொள்கையை நம்புகிறேன். இறுதியில், இந்த வைரஸ் நம்மைக் கடந்து செல்லும். என் வாழ்நாளில் போர்களும் பிற பயங்கரமான அச்சுறுத்தல்களும் கடந்து செல்வதை நான் கண்டிருக்கிறேன். இதற்கு முன்பு பல முறை செய்ததைப் போல நமது உலகளாவிய சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப நமக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லோரும் பாதுகாப்பாக இருக்க முடியும். அமைதியாக இருக்க முடியும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். நிச்சயமற்ற இந்த நேரத்தில், பலர் கரோனாவை விரட்டுவதற்காக மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சிகள் குறித்த நம்பிக்கையையும் நம்பிக்கையையும் நாம் இழக்காதது முக்கியம்''.

இவ்வாறு தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x