

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும், பொது இடங்களுக்கு மக்கள் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறையும் அல்லது இரு தண்டனையும் சேர்த்து தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 51(பி)ன் கீழ் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, “பொது இடங்களில் எச்சில் துப்புவது அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். மது, குட்கா, புகையிலை போன்றவற்றின் விற்பனையும் தடை செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ''மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தி உத்தரவுகளை மதிக்காதவர்களுக்கு அபராதமும், தண்டனையும் தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டம் 2005-ன் கீழ் வழங்க வேண்டும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் என்பது பாதிக்கப்பட்டவர்கள் தும்முதல், இருமுதல் மற்றுமம் எச்சில் துப்புதல் மூலம் பரவும் அபாயம் இருப்பதால் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்க்கும் செயலை மக்கள் பெரும்பாலும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.
மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்குப் பின், மும்பை மாநகராட்சி விடுத்த எச்சரிக்கையில் பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, டெல்லி, பிஹார், ஜார்க்கண்ட், தெலங்கனா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, ஹரியாணா, நாகாலாந்து, அசாம் மாநிலங்களும் இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மேலும், புகையிலைப் பொருட்கள், சுவைக்கும் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகியவற்றின் விற்பனைையையும் இந்த மாநில அரசுகள் தடை செய்துள்ளன.