Last Updated : 15 Apr, 2020 05:22 PM

 

Published : 15 Apr 2020 05:22 PM
Last Updated : 15 Apr 2020 05:22 PM

தாமதம் ஆகாது; 3 நாளில் பணம்: விவசாயிகளுக்கு மத்திய அரசு உறுதி 

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி : கோப்புப் படம்.

புதுடெல்லி

விவசாயிகளிடம் இருந்து தானியங்களை கொள்முதல் செய்தால் இந்த முறை தாமதம் ஆகாது. கொள்முதல் செய்த 3 நாட்களில் பணம் வழங்கப்படும் என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை அமல்படுத்திய லாக் டவுனின்போது வேளாண் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. விவசாயிகளும் வருமானமில்லாமல் பாதிக்கப்பட்டனர். ஆதலால், இந்த முறை விவசாயிகளிடம் இருந்து ராபி பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் தானியங்களுக்கு விரைவாகப் பணத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் 2-வது கட்டமாக மே மாதம் 3-ம் நீட்டிக்கப்பட்ட லாக் டவுனிலும் 20-ம் தேதிக்குப் பின் வேளாண் பணிகளுக்கு லாக் டவுனிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து தானியங்களைக் கொள்முதல் செய்யும் பணி தொடங்கிவிட்டது. ஹரியாணாவில் முதலில் கடுகு கொள்முதலும், 20-ம் தேதியிலிருந்து கோதுமை கொள்முதலும் செய்யப்படும்.

இதற்கு முன் விவசாயிகளிடம் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களைக் கொள்முதல் செய்து ஒரு மாதத்துக்குப் பின்புதான் பணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை விவசாயிகளின் சிரமம் கருதி கொள்முதல் செய்த 3 நாட்களில் அவர்களுக்குப் பணம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

இதற்காக அனைத்து மாநில அரசுகளிடமும் பேசி, முறையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுள்ளோம். வேகமாக பட்டியலையும், அறிக்கையையும் அனுப்பி வைக்க மாநிலங்களைக் கேட்டுள்ளோம்.

கரோனா வைரஸ் காலத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இருககும். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும். விவசாயிகளின் எந்தப் பணியும் நின்றுவிடக்கூடாது. அவர்கள் தொடர்ந்து பணியாற்ற உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ராபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து தானியங்களைக் கொள்முதல் செய்ய பஞ்சாயத்து அளவில் போதுமான ஏற்பாடுகளைச் செய்யக் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த நேரத்தில் விவசாயிகளிடம் தானியக் கொள்முதலில் ஈடுபடும்போது சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஒரு விவசாயியிடம் இருந்து நாள்தோறும் 25 குவிண்டால் கடுகுதான் கொள்முதல் செய்துவந்தோம். அதன் அளவை உயர்த்தி 40 குவிண்டாலாக அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் கவலையைப் புரிந்து அரசு கொள்முதல் அளவை உயர்த்தியுள்ளது''.

இவ்வாறு மத்திய இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x