தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மீது விபத்தை ஏற்படுத்திய பிரிவின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் அலுவலகம் | படம்: ஏஎன்ஐ
டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் அலுவலகம் | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மதவழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது ஐசிபி 304-வது பிரிவில் (கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றம்) டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார், சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினர். இதில் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், பலருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததும் தெரியவந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் பங்கேற்று இருந்தனர்.

ஆனால், மார்ச் முதல் வாரத்தில் இருந்து நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது.

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி : படம் | ஐஏஎன்எஸ்
தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி : படம் | ஐஏஎன்எஸ்

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 31-ம் தேதி நிஜாமுதீன் பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இருமுறை நேரில் ஆஜராக மவுலானா சாத் கந்தால்விக்கு போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சூழலில் தப்லீக் ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட மதவழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரி வந்ததையடுத்து, மவுலானா சாத் கந்தால்வி மீது (கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றம்) இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 304-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி சமீபத்தில் வெளியிட்ட ஆடியோவில், தப்லீக் ஜமாத் மதவழிபாடு மாநாட்டுக்கு வந்து சென்ற பலருக்கும் கரோனா தொற்று உறுதியானதால் தான் சுய தனிமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in