

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மகள்களைப் பராமரிக்கத் துணிந்த தாய் 19 நாட்களுக்குப் பிறகு எந்தவித நோய்த் தொற்றுமின்றி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது. இந்த ஆச்சரியமான அனுபவங்களில் குழந்தைகளும் குணமாகியுள்ளனர் என்பது நல்ல செய்தி.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ள அதேவேளையில் 1,305 பேர் குணமடைந்துள்ளனர் என்ற புள்ளிவிவரமும் நமக்கு ஆறுதலைத் தருகிறது.
ஸ்ரீநகரின் நாட்டிபோரா பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான இர்பான் மஸ்ரத். இவரின் 58 வயதான மாமனார் கடந்த மாதம் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியபோது உடன் கரோனாவையும் அழைத்துவந்துவிட்டார். மாமனாருக்கு கரோனா வைரஸ் நோய் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுதெரியாமல் மஸ்ரத்தின் 4 மற்றும் 7 வயதுடைய இரு இரு பெண் குழந்தைகளும் தாத்தாவிடம் மிகவும் பாசமாக ஒட்டிக் கொண்டிருந்தனர். அதன் விளைவாக அவர்களுக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த மார்ச் 18-ல் உறுதியானது.
மகள்களுக்கு நோய்த் தொற்று உறுதியானதைக் கேள்விப்பட்டதும் உலகமே சுழற்சியை நிறுத்திக்கொண்டது போல் மஸ்ரத் உணர்ந்தார். அவ்விரு குழந்தைகளையும் தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்க காஷ்மீர் மருத்துவத்துறை முடிவெடுத்தபோது, குழந்தைகளைப் பிரியமாட்டேன் என உறுதி காட்டினார்.
மஸ்ரத்தின் குடும்பம் கோவிட்-19 நோய்த்தொற்றால் பிரிந்தது. அவரது மாமனார் மார்பு நோய் மருத்துவமனையில் வைரஸுடன் போராடினார். பிற குடும்ப உறுப்பினர்கள் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
''கரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மற்றும் 7 வயதுடைய இரு மகள்களைத் தனிமையில் விடமாட்டேன். அவர்களை நானே பராமரிப்பேன்'' என்று தாய் மஸ்ரத் உறுதியளித்ததை மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஜே.எல்.என்.எம் மருத்துவமனையில் குழந்தைகளை அவர் தனியாகப் பராமரித்து வந்தார்.
முகக் கவசங்களை மாற்றுவது, கை சுகாதாரத்தை உறுதி செய்தல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர் மிகச் சரியாகச் செய்தது மருத்துவர்களையே வியக்க வைத்தது.
இதுகுறித்து மஸ்ரத் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“என் மகள்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தபோது எனக்குக் கீழே பூமியே குலுங்குவதுபோல் இருந்தது. குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை, எந்த மருந்தும் இல்லாத ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ‘பாசிட்டிவ்’ என்ற சொல் தாங்கமுடியாததாகத் தெரிந்தது.
நான் எனது மகள்களுடன் இருந்துகொண்டு அவர்களைப் பராமரிக்கிறேன் என்று உறுதியளித்தேன். கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளான மகள்களுடனே ஜவஹர்லால் நேரு நினைவு (ஜே.எல்.என்.எம்) மருத்துவமனையின் தனிமை வார்டில் 19 நாட்கள் செலவழித்த பின் எந்தவித பெரிய அறிகுறிகளும் இல்லாமல் தற்போது வெளியே வந்துள்ளேன்.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் உணர்வு இயல்பாகவே வரக்கூடியதுதன். நான் வைரஸால் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. காரணம் அதற்கு பதிலாக என் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கமாக இருந்தது.
என் மூத்த மகளுக்கு சிறிது நேரம் காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால் அது பாராசிட்டமால் மாத்திரை போட்டதும் சரியாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் எழுந்து, கோவிட் -19 அறிகுறிகள் எதுவும் என் குழந்தைகளிடம் இருக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்தேன்.
பயன்படுத்தப்பட்ட டிஸ்யூ காகிதங்களை அகற்றுதல், முகக்கவசங்களை மாற்றுவது மற்றும் கை சுகாதாரத்தை உறுதி செய்தல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தேன்.
நான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது போலவும், அவர்கள் என்னிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது போலவும் நான் அவர்களை மனதளவில் தயார் செய்தேன். எனது நான்கு வயது மகளை நான் தொடவோ கட்டிப்பிடிக்கவோ இல்லை. ‘நான் நலமாக இருந்ததால் ஏன் என்னை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவில்லை’ என்று என் மகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். அது வேதனையாக இருந்தது. ஆனால் அவர்கள் இருவருமே மிகவும் நன்றாக ஒத்துழைத்தனர்.
மருத்துவமனையின் மருத்துவர்கள் உட்பட ஊழியர்கள் எங்களுக்கு மிகவும் இணக்கமாக இருந்தனர். என் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக என் பிரார்த்தனையில் அவர்கள் என்னுடன் சேர்ந்து கொண்டனர். நான் அதை அல்லாஹ்வின் சோதனையாக எடுத்துக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் அதைப் பொறுமையுடனும் கடந்து சென்றோம்.
நான் என் மகள்களுக்காகப் போராடிய அனுபவத்தைக் கொண்டு இந்தப் பேட்டியில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பத்தினருக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி விதியைப் பின்பற்றுங்கள். இந்த நோயை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது நமது வீடுகளுக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.''
இவ்வாறு மஸ்ரத் தெரிவிததார்.
ஜே.எல்.என்.எம் மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் தபசும் ஷா இதுபற்றி கூறுகையில், ''எந்தப் பொருளையும் தொடாமல் இருங்கள் என்று பெண் குழந்தைகளிடம் கூறினோம். மேலும், அவர்களது கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும், மன அதிர்ச்சியைத் தடுக்கவும் பொம்மைகள், கிரேயன் பென்சில்கள் மற்றும் ஓவியம் வரைவதற்கான தாள்களை வழங்கினோம்.
திங்களன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னர் தாயையும் பரிசோதித்தோம். அவருக்கு எந்தவித நோய்த் தொற்றும் இல்லை என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து ஊழியர்களும் அவர்கள் வெளியேறும்போது அவர்களை உற்சாகப்படுத்தி வழியனுப்பினோம். சிறுமிகளின் தந்தைக்கும் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இரு குழந்தைகளும் இப்போது 14 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள், ”என்றார்.