

ஆந்திராவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது பேறுகால விடுப்பை கைவிட்டு, ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
2013-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீஜனா கும்மல்லா. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார்.
கர்ப்பிணியாக இருந்த இவர், பேறுகால விடுப்பில் சென்றார். இவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் பரவிவரும் வேளையில் மக்கள் பணியாற்ற, 6 மாதகால விடுப்பை கைவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் மடியில் கைக்குழந்தையுடன் அவர் பணியாற்றும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து அதிகாரி ஸ்ரீஜனா கூறும்போது, “ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் தருணம் இது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த வைரஸை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், விடுப்பில் உள்ள ஐஏஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உத்தரவிட்டார். எனினும் 1 மாத குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய ஸ்ரீஜனாவின் கடமை உணர்வை அமைச்சர் ஷெகாவத் பாராட்டியுள்ளார். ஸ்ரீஜனா தனது கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படத்தையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.