முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வி.ராஜசேகரன் காலமானார்: எடியூரப்பா, டி.கே.சிவகுமார் நேரில் அஞ்சலி

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வி.ராஜசேகரன் காலமானார்: எடியூரப்பா, டி.கே.சிவகுமார் நேரில் அஞ்சலி
Updated on
1 min read

முன்னாள் மத்திய‌ அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான எம்.வி.ராஜசேகரன் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 91.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள மரளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.வி.ராஜசேகரன். காந்திய கருத்தியலில் ஈர்க்கப்பட்டு சிறுவயதிலே காங்கிரஸில் இணைந்த அவர், சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றார். வேளாண் வல்லுந‌ரான இவர் முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் ஆட்சியில் கிராம வளர்ச்சி ஆலோசகராக இருந்தார். பின்னர் நிஜலிங்கப்பாவின் மகள் கிரிஜாவை மணந்தார். பிறகு கர்நாடக சட்டமேலவைக்குத் தேர்வான ராஜசேகரன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திட்ட மற்றும் புள்ளியியல் துறையின் இணை அமைச்சராகப் பதவி வகித்தார். முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசியலில் இருந்து விலகினார். அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜசேகரன் காலமானார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in