லாக் டவுன் முடியும் மே-3-ம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து; டிக்கெட்டை கேன்சல் செய்யாதீர்: ரயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனை பிரதமர் மோடி நீட்டித்ததைத் தொடர்ந்து, பயணிகள் ரயில் போக்குவரத்தும் மே மாதம் 3-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 25-ம் தேதி கொண்டு வந்தரர். இதனால் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலையிழந்து வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 21 நாட்கள் லாக் டவுன் இன்று முடியும் நிலையில் பிரதமர் மோடி மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது, கரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து இருப்பதால் லாக் டவுன் காலத்தை மே 3-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார்.

இதையடுத்து, ரயில்வே துறையும் பயணிகள் போக்குவரத்தை வரும் 3-ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்வதால், அனைத்துப் பயணிகள் ரயி்ல் போக்குவரத்தும் அதாவது ப்ரீமியம் ரயில்கள், மெயில், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில், கொல்கத்தா மெட்ரோ, கொங்கன் ரயில்வே ஆகியவை மே 3-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடர்ந்து இயக்கப்படும். மே 3-ம் தேதி வரை அனைத்து ரயில் நிலையங்களிலும், முன்பதிவு, முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கும் அலுவலகம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பின் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், அந்த டிக்கெட்டுக்குரிய கட்டணம் முழுமையாக பயணிக்குத் திருப்பி அனுப்ப மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் ஆன்-லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால் டிக்கெட்டை கேன்சல் செய்யத் தேவையில்லை.

அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த முன்பதிவும் இருக்காது. ஜூலை 31-ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் டிக்கெட்டை ரத்து செய்தால் முழுமையாக ரீபண்ட் பெறலாம் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 9 ஆயிரம் பயணிகள் ரயிலையும், 3 ஆயிரம் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலையும் இயக்கி வருகிறது. இந்த லாக் டவுனால் 12 ஆயிரம் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in