

ஆட்சிஅதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும். இந்தச் சிக்கலில் இருந்து விரைவில் மீண்டு தேசம் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி மக்களுக்குப் பேசும் வீடியோவை வெளியிட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
''கரோனாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுன் காலத்தில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே, பாதுகாப்பாக இருக்க வேண்டும். லாக் டவுனின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் ஆதரவும் இல்லாமல் கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முடியாது.
லாக் டவுன் காலத்தில் மக்கள் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடித்து, வீட்டுக்குள்ளேயே இருந்ததற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மிகப்பெரிய போரில் தேசம் ஈடுபட்டிருக்கும்போது, காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் சூழலைப் புரிந்துகொண்டு, போரில் ஒவ்வொரு வீரர்களுக்கும் உதவத் தயாராக இருக்க வேண்டும்.
மாநில அளவில், மத்திய அளவில் யாரேனும் உதவி கேட்டாலும் ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் உதவுவார்கள். நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பார்கள். இதுபோன்ற அசாதாரண நேரத்தில் கரோனாவுக்கு எதிரான போரில் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக இருக்கும் என்று மக்களிடம் உறுதியளிக்கிறோம்
காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எந்த இடத்திலும் இந்தப் போரில் உங்களுக்காக காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும். நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். இந்தச் சிக்கலில் இருந்து விரைவில் மீள்வோம்.
உங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள் கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியைக் கையாள்வதில் உங்கள் ஆதரவு தேசபக்திக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. உங்களின் உதவி, ஆதரவால்தான் தேசம் இந்தப் போராட்டத்தில் வெல்ல முடியும். எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை.
நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வ நிறுவனங்கள், போலீஸார், அரசு ஊழியர்கள் என அனைவரும் கரோனாவுக்கு எதிரான போரில் போர் வீரர்களாகச் செயல்படுகிறார்கள். இரவு பகலாக உழைக்கிறார்கள்.
இந்தப் போர் வலுவிழக்காது. அது நடக்க அனுமதிக்கமாட்டோம். சில இடங்களில் மருத்துவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என அறிந்தேன். இது தவறாகும். நமது கலாச்சாரம், பாரம்பரியம் இதை அனுமதிக்காது. நாம் மருத்துவர்களின் சேவைக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஏழை மக்களுக்கு சிலர் உணவு, ரேஷன் பொருட்கள், சானிடைசர் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறார்கள். அவர்களின் பணி போற்றத்தகுந்தது. ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையுடன் இருந்து போராட்டத்தில் பங்கேற்றுப் போராடுவது அவர்களின் கடமை''.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.