

கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த 24-ம் தேதி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். பிஹார் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக அம்மாநில அரசு அவசர உதவி எண்களை அறிவித்தது. அதில் தவறுதலாக கர்நாடக காவல் துறை ஐஜிபி சீமந்த்குமார் சிங்கின்கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த மூன்று வாரங்களாக தினமும்நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டுள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று சீமந்த்குமார் தனது சக ஐபிஎஸ் அதிகாரிகளின் மூலம் உதவி செய்து வருகிறார்.
இதுகுறித்து சீமந்த்குமார் கூறுகையில், “நான் இந்த கைப்பேசி எண்ணை 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறேன். ஊரடங்கு உத்தரவு சமயத்தில் தவறுதலாக எனது எண் அவசர உதவி எண்ணாக அறிவிக்கப்பட்டு விட்டது. அதைப் பார்த்து வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள பிஹார் தொழிலாளர்கள் ஏராளமானோர் என்னை தொடர்பு கொள்கின்றனர்.
சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், போதிய உணவு இருப்பிட வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்கள்,என்னை தொடர்புகொள்ளும் போது, ‘இது தவறான எண்’ என சொல்ல முடியுமா? அதனால் தினமும் குறைந்தது நூறு செல்போன் அழைப்புகளை ஏற்று, உதவி செய்கிறேன். பெங்களூருவில் சிக்கியுள்ள 400 பிஹார் தொழிலாளர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். என்னுடைய இந்த முயற்சிக்கு சிபிசிஐடி ஏடிஜிபி தயானந்த் மற்றும் அரசு சாரா அமைப்பினர் உதவி செய்தனர்.
இதேபோல் கேரளாவில் சிக்கிய சிலர் என்னை தொடர்பு கொண்டனர். அங்கிருந்த என் பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உணவு மற்றும் இருப்பிடம் ஏற்பாடு செய்து கொடுத்தேன். இதே போல ஆந்திரா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த அழைப்புகளுக்கு அங்குள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப் குழு மூலம் தொடர்பு கொண்டு உதவினேன். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழிகாட்டி உதவி இருக்கிறேன். கரோனா காலத்தில் நிர்க்கதியற்று கிடக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதில் ஒரு வித மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது” என்றார்.