

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள காய்கறி சந்தையில், மக்கள் கூடுவதை தடுக்க போலீஸார்தடுப்புகளை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இத்தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஒரு கார் உள்ளே புகுந்தது. காரில் சீக்கியர்களில் ஒரு பிரிவினரான நிஹாங்கியர்கள் இருந்தனர். இவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் போலீஸார் மீது காரில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஹர்ஜித் சிங் என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டரின் கை துண்டிக்கப்பட்டது. மேலும் 6 போலீஸார் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கையுடன் சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் ஹர்ஜிங் சிங் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஏழரை மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
இதனிடையே போலீஸார் மீதான தாக்குதல் தொடர்பாக டேரா என்ற கிராமத்தில் இருந்து 11 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.39 லட்சம் ரொக்கம், 2 பெட்ரோல் குண்டுகள், கத்திகள், ஈட்டிகள் மற்றும் போதைப் பொருளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.