

நடப்பு செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஊடகங்கள் உள்ளன. ஆனால் பரபரப்பு செய்திகளுக்கு மட்டும்தானா? கடந்த வாரம் சீனாவின் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டதால், இந்திய பங்குச் சந்தையிலும் பீதி நிலவியது.
கடந்த 24-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் எழுந்து செய்திகளைப் படித்தேன். ஆசிய பங்குச் சந்தை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சி அடைந்ததை அறிய முடிந்தது. அப்போது காலை 5 மணி. உடனே இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. ஏனெனில் இந்த விஷயம் மிகவும் சீரியஸானது. உலகில் உள்ள அத்தனை ஊடகங்களும் பங்குச் சந்தை சரிவைப் பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தன. காலை 9 மணிக்கு பங்குச் சந்தை தொடங்கியவுடன் தொலைக்காட்சியைப் பார்த்தால் தெளிவாக புரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
ஆனால், ஆங்கில தொலைக் காட்சி சேனலில் என்ன காட்டினார் கள் தெரியுமா? பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முகநூலில், இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும், அந்த இளைஞர் தன்னை மானப்பங்கப்படுத்த முயற்சித்தார் என்று குறிப்பிட்டிருந்தார். முகநூல் பயன்படுத்துபவர் பாஷையில் சொல்ல வேண்டுமானால், அந்தப் புகைப்படம் ‘வைரலாக’ பரவியது. இந்த கதையைத்தான் ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருந்தன.
ஒரு ஆங்கில சேனலில்கூட இந்திய பங்குச் சந்தை சரிந்ததைப் பற்றி விவாதிக்கவில்லை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள், நிபுணர்கள் மட்டும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். என்னைப் போல ஊடகங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு இது புதிது. அற்பத்தனமான செய்திகளை ஊதி ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. அதனால் நான் ஆச்சரியம் அடையவில்லை.
ஆனால், எது புதிது என்றால், புதிதாக எந்த பெரிய செய்தியாவது வெளியானாலும் அவர்கள் இதையே செய்வார்கள். ஆனால், அன்று காலை பங்குச் சந்தை வீழ்ச்சி பற்றி சேனல்கள் கவலைப்படாதது என்னை பதற்றத்துக்கு உள்ளாக்கியது. ஏனெனில், பங்குச் சந்தையில் ஏதோ நடக்கிறது, அது நமது பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதுதான். ஆனால், ஊடகங்கள் எதில் ஆர்வமாக இருக்கின்றன என்றால், ஒருவரின் நடத்தையைப் பற்றி இன்னொருவர் என்ன சொல்கிறார் என்பதை வெளியிடுவதில்தான்.
பங்குச் சந்தை வீழ்ச்சி நடந்த மறுநாள் செவ்வாய்க்கிழமை குஜராத்தில் படேல் சமூகத்தினரின் போராட்டம் தேசிய செய்தியானது. அந்தப் போராட்டத்தை ஜாதி அரசியல், குஜராத் மாடல், இடஒதுக்கீடு யோசனைகள், சமநிலையற்ற வளர்ச்சி என்றெல்லாம் பல விதங்களில் சேனல்கள் அலசி ஆராய்ந்தன. வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம், பிபிசி போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் என்னிடம் பேட்டி கண்டன. எல்லா ஊடகங்களுமே படேல் போராட்டம் குறித்து என்னதான் நடக்கிறது என்பதை அறியவே ஆர்வம் காட்டின.
அதன் பிறகு புதன்கிழமை படேல் போராட்டம் செய்தி இல்லை. அதற்கு பதில் 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட செய்தி பரபரப்பாக இருந்தது. படேல் போராட்டத்தில் 10 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட வலியுறுத்துகிறார்கள். இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று படேல் சமூகத்தினர் கூறுகின்றனர். ‘மெரிட்’ அடிப்படையில் எதுவும் நடக்க வேண்டும் என்று முற்படுத்தப்பட்ட மக்கள் கேட்கின்றனர். அவர்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட நிலைமையைப் போல், படேல் பிரச்சினை அரசியலில் மாற்றம் கொண்டு வரும் அளவுக்கு தீவிரமானது. இவை எல்லாம் ரகசியமானவை அல்ல. ஆனால், இன்னும் கொலை பற்றிய செய்திகளை விரிவாக தெரிந்து கொள்ளவே பலர் நினைக்கின்றனர். சிலர் மட்டும் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.
தொலைக்காட்சிகளுக்கு பரபரப்பாக உள்ள செய்திகள்தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். பொழுதுபோக்கு அம்சங்கள், தேவையில்லாத செய்திகளை அவர்கள் வெளியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், முக்கியமான செய்திகளையும் வெளியிடாமல் பொறுப்பில்லாமல் செயல்படுவதை என்னால் மன்னிக்க முடியவில்லை. தொலைக்காட்சி ஊடகம், குறிப்பாக ஆங்கில சேனல்கள் தங்கள் நேயர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றன என்றுதான் நான் நினைக்கிறேன்.