

கோவிட்-19 நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநில மக்கள் அதிகபட்சமாக குணமடைந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது. 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 7 ஆயிரத்து 987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 856 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் அசாம் உள்ளிட்ட பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; விரைவில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அசாம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:
"அசாமில் உள்ள 30 கோவிட் -19 நோயாளிகளில் பெரும்பாலோர் குணமடைந்து வருகிறார்கள். மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவது புதன்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் உறுதியாக, நல்ல நிலையில் உள்ளனர்.
சேகரிக்கப்பட்ட 3,209 ரத்த மாதிரிகளில், 3,070 பேருக்கு கரோனா வைரஸ் இல்லை. தப்லீக் ஜமாத்தில் பங்கேற்றவர்களைச் சந்தித்தவர்களின் 1,421 மாதிரிகளில் 29 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் இருப்பதாக சோதனையில் தெரியவந்துள்ளது. 1,358 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. மீதமுள்ள 34 மாதிரிகளின் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறோம்.
மேலும் இரண்டு பேரிடம் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அசாமைச் சேர்ந்த 35 வயது நபர் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த 33 வயது நபர்.
(டெல்லியில்) நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் தொடர்புடைய துப்ரி (மேற்கு அசாம்) நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.‘
திமாபூரில் (நாகாலாந்து) ஒரு தனியார் மருத்துவமனை ஒரு நோயாளியை கவுகாத்தி மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சிஎச்) மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பியது. ஜிஎம்சிஎச்இல் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகாலாந்தைச் சேர்ந்த நபர் மார்ச் 24 அன்று கொல்கத்தாவிலிருந்து திமாபூர் சென்றார், இதனால் அவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று அறிகுறிகள் உருவானதால் அவர் ஏப்ரல் 5 ஆம் தேதி ஜி.எம்.சி.எச்.சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
37 நேர்மறையான வழக்குகளில் ஐந்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவையாகும். அவை அசாம் (31), மணிப்பூர் (2), திரிபுரா (2), மிசோரம் (1) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (1). இதில் 30 பேர் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை நோய்த்தொற்று அதிகம் பேரைப் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே பாதித்த சிலரும் குணமடைந்துவருகின்றனர்.
ஏப்ரல் 10 ஆம் தேதி ஹைலாகண்டி மாவட்டத்தில் அரசு தனது முதல் கரோனா வைரஸ் மரணத்தை அறிவித்தது. அசாமில் கோவிட் -19 மரணம் வடகிழக்கில் முதல் நிகழ்வாகும்.
மணிப்பூரில், கடந்த மாதம் இங்கிலாந்திலிருந்த திரும்பி வந்த 23 வயதுப் பெண் வடகிழக்கில் முதல் கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்போது குணமடைந்துள்ளார். அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய் இல்லை என்ற முடிவு வந்தது. அவர் நேற்று வீடு திரும்பினார்''.
இவ்வாறு அசாம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.