

அசாதாரண சூழலில், அசாதாரண முடிவுகளை துணிச்சலாக எடுக்க வேண்டும். லாக் டவுனுக்குப் பின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜிடிபியில் 6 சதவீதம் வரை ஒதுக்கலாம். நிதிப் பற்றாக்குறை பற்றிக் கவலை வேண்டாம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி ஆலோசனை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் நிலையில் முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா காணொலி மூலம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனால் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும். அதைச் சரிசெய்ய மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) ஒரு சதவீதத்துக்கும் குறைவாக மத்திய அரசு செலவிட்டு வருகிறது.பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த அளவு போதாது
இதுபோன்ற அசாதாரண நேரங்களில் அசாதாரண முடிவுகளை பிரதமர் மோடி துணிச்சலாக எடுக்க வேண்டும். மொத்த ஜிடிபியில் 5 முதல் 6 சதவீதத்தை கரோனா நிவாரண நிதிக்கும், பொருளாதார மீட்சிக்கும் செலவிடலாம். அமெரிக்கா 10 சதவீதம் ஜிடிபியில் செலவிடுகிறது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் 15 சதவீதம் வரை செலவிடுகின்றன.
2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, அதைச் சமாளிக்க அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜிடிபியில் 3 சதவீதத்தை தாராளமாகச் செலவிட்டு பொருளாார வளர்ச்சியைத் தூண்டிவிட்டது.
இந்த நேரத்தில் மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோருக்கு புதிதாக இன்னும் சலுகைகளை அறிவித்து செலவிட வழிவகுக்கலாம். இப்போதுள்ள சூழலில் மத்திய அரசு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பல்வேறு துறைகளுக்கு நிதியுதவி அளித்து கைதூக்கிவிட வேண்டும். துணிச்சலான முடிவுகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும்
மாநிலங்களுக்கு நிலுவையில் இருக்கும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதிய நிலுவை ஆகியவற்றை உடனடியாக மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
நடுத்தர மற்றும் சிறு தொழில்துறைதான் ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லாமல் கடன் அளித்து சரிவிலிருந்து மீட்க வேண்டும்.
நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனை முழுமையாகவும் உடனடியாகவும் நீக்கக்கூடாது. அது ஆபத்தாகும். படிப்படியாக லாக் டவுனை நீக்க வேண்டும். பொருளாதாரச் செயல்பாடுகள் தொடங்கியபின், சாலை வழியாக போக்குவரத்து தொடங்க வேண்டும்.
ஏனென்றால் வேளாண் பணிகள் எந்தவித்திலும் பாதிக்கப்படக்கூடாது. அறுவடை நேரத்தில் போக்குவரத்து மிகவும் அவசியம். தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்பு நிதியை மத்திய அரசிடம்தான் வழங்கி வருகின்றன. அந்த நிதியை அந்தந்த மாநில அரசுகளிடமே முதல்வர் நிவாரண நிதியில் வழங்கலாம். பிஎம் கேர்ஸ் நிதியை பிரதமர் நிவாரண நிதியோடு இணைக்க வேண்டும்''.
இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.