

பஞ்சாப் மாநிலத்தில் லாக் டவுனில் சிக்கித் தவித்த பூடானைச் சேர்ந்த 134 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று காலை நாடு திரும்பினர்.
கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களை இந்தியா பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வருகிறது.
பூடானில் இதுவரை 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் பூடானுக்கு முன்னெச்சரிக்கையாக 2 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்து உதவியுள்ளது.
பிரதமர் மோடி முன்மொழிந்ததை அடுத்து, கரோனாவை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு உதவுவதற்காக சார்க் அவசர நிதியாக பூடான் அரசு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பாக்வாரா ஜலந்தருக்கு அருகிலுள்ள லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் சிக்கித் தவித்த 134 பூடான் மாணவர்கள், அந்நாட்டு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு விமானம் மூலம் இன்று காலை பூடான் நாட்டுக்குத் திரும்பினர்.
பின்னணி என்ன?
கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் காட்டுத் தீயென வளர்ந்த பிறகு பஞ்சாப் மாநிலத்தின் பாக்வாரா ஜலந்தருக்கு அருகில் உள்ள லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 134 பூடான் மாணவர்கள் உடனடியாக சொந்த நாடு செல்ல விரும்பினர். ஆனால் இந்தியாவில் கடந்த கடந்த 20 நாட்களாக லாக் டவுன் அமலில் இருந்ததால் இந்தியாவில் விமானப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் தொடர்ந்து சிக்கித் தவித்து வந்தனர்.
இதனை அடுத்து பூடான் அரசு மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தது. இன்று காலை ஜலந்தரிலிருந்து 138 மாணவர்களையும் ஏற்றிச்சென்ற சிறப்பு விமானம் பூடான் திரும்பியது.
இதுகுறித்து பஞ்சாபின் சிறப்பு தலைமைச் செயலாளர் (பேரழிவு மேலாண்மை) கே.பி.எஸ் சித்து தனது ட்விட்டர் தளத்தில் ''பாக்வாரா ஜலந்தரின் விடுதிகளில் சிக்கித் தவித்த 134 பூடான் மாணவர்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தின் மூலம் பூடானுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் '' என்று தெரிவித்துள்ளார்.