

21 நாட்கள் லாக் டவுன் காலத்தில் பொருளாதாரம் முடங்கி, வேலையின்றி இருக்கும்போது, ஏழைகள் பணமி்ல்லாமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்த முடியும் என்று மத்திய அரசு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 5 குழந்தைகளுக்கும் உணவு வழங்க முடியாமல் ஆற்றில் குழந்தைகளை வீசித் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி வெளியானது. இதைக் குறிப்பி்ட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “ உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 5 குழந்தைகளுக்கும் உணவு வழங்க முடியாமல் ஆற்றில் குழந்தைகளை வீசித் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையானது என்றால் மிகவும் வேதனைக்குரியது.
ஏழைகள் கைகளில் பணமில்லாமல் தங்கள் குடும்பத்தினருக்குத் தேவையான மருந்துகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் எவ்வாறு வாங்க முடியும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். மாநில அரசுகள் தங்களிடம் இருக்கும் நிதியின் மூலம் குறைந்த அளவு பணத்தைத் தான் ஏழைகளுக்கு வழங்க முடியும்.
வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பணம் வழங்காது. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் நேரடியாக மத்திய அரசு பணம் வழங்காது. இந்த கடுமையான அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
ரூ.30 லட்சம் கோடி பட்ஜெட்டில், ஏழைகளுக்கு ரூ.65 ஆயிரம் கோடியை எளிதாக மாற்றிவிடலாம். பட்ஜெட்டில் 2.2 சதவீதம் செலவீனம்தான் இருக்கிறது. மத்திய அரசு அதிகமாக கடன்பெற்று பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆழ்ந்த அறிவுரை வழங்கியுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் ப.சிதம்பரம் கூறுகையில், “ மத்திய அரசிடம் இருந்து மிகக்குறைவாகவே மாநிலங்களுக்குப் பணம் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு டிசம்பர் ஜனவரி மாதத்துக்கானது. மாநிலப் பேரிடர் நிதியின் முதல் தவணை, மருத்துவக் கட்டமைப்பு நிதி என ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே வந்துள்ளது.
ஏராளமான வங்கிக் கிளைகள் திறந்துள்ளன. பல எல்ஐசி அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. நகைக்கடன் வழங்குவதை பல வங்கிகள் நிறுத்திவிட்டன. நடுத்தரக் குடும்பத்தினர் பணத்துக்காக எங்கு செல்வார்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.