

புனித ரமலான் மாதம் தொடங்கவுள்ள நிலையில் மசூதிகளுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்தநிலையில் புனித ரமலான் மாதம் தொடங்கவுள்ள நிலையில்வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘புனித ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. கரோனா தாக்கம் அதிகரித்த வருவதால் முஸ்லிம் மக்கள் மசூதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்த வேண்டும். அதுபோலவே பொது இடங்களில் கூட்டுத்தொழுகை எதிலும் ஈடுபட வேண்டாம். ’’ எனக் கூறியுள்ளார்.