

ஜெய்ப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்மூலம் நகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் புதியதாக 96 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 796ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எச்சரிக்கை மணியை அடித்துக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இது வரை 8356 பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 273 பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் கரோனா நோய் பரவல் குறித்த விரிவான தகவல் ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை கூறியுள்ளதாவது:
ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் புதியதாக 96 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களில், ஜெய்ப்பூரில் 35 பேரும், பன்ஸ்வாராவில் 15 பேரும், டோங்கில் 11 பேரும், ஜோத்பூர் மற்றும் பிகானேரில் தலா எட்டு பேரும், கோட்டாவில் ஏழு பேரும், நாகவூரில் ஐந்து பேரும், ஹனுமன்கர், ஜெய்சால்மர், சுரு மற்றும் சிகார் ஆகிய இடங்களில் தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 796 ஐ எட்டியுள்ளது.
தலைநகர் ஜெய்ப்பூரில் மோசமான நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன.
ஜெய்ப்பூரில் மட்டுமே இதுவரை 338 பேருக்கு இந்நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ராம்கஞ்ச் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, சனிக்கிழமை மாநிலத்தில் 139 பேருக்கு புதியதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டன. இது ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோயாகும்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.