காஷ்மீர் பிரச்சினை இடம்பெறாமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை: பாகிஸ்தான் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை இடம்பெறாமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை: பாகிஸ்தான் திட்டவட்டம்
Updated on
2 min read

காஷ்மீர் பிரச்சினை இடம்பெறாமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் ஆகியோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 23-24-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாதிகளுடனான ஆலோசனைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரிவினைவாத தலைவர்களை சந்திக்க வேண்டாம் எனவும் இந்திய தரப்பில் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், "பாகிஸ்தான் தலைமை இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஹூரியத் தலைமையை சந்திப்பது வழக்கம். 'இந்த நீண்ட நாளைய செயல்பாட்டை இப்போது விட்டுவிடுவதற்கான அவசியம் இருப்பதாக தாங்கள் கருதவில்லை" என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில், "இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பின்போது, காஷ்மீர் பிரச்சினை இடம்பெறாமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை.

காஷ்மீர் பிரச்சினை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமல்ல என இந்தியா கூறியிருப்பது மிகவும் தவறானது.

இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட மூன்று முக்கிய விவகாரங்களை பாகிஸ்தான் முன்வைத்துள்ளது. இது ரஷ்யாவின் உஃபா நகரில் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பின் போது ஏற்பட்ட ஒருமித்த முடிவின்படியே தயாரிக்கப்பட்டுள்ளது.

அப்படியிருக்கும்போது, பிரிவினைவாத தலைவர்களுடனான பாகிஸ்தான் ஆலோசனைக்கு கெடுபிடி செய்வது ஏற்புடையதல்ல.

ஹூரியத் தலைவர்களை சந்திப்பதற்கு இந்தியா தடை விதித்தது பாகிஸ்தான் நாடு யாரை விருந்தினராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இந்தியா தங்கள் கைகளில் வைத்திருப்பது போல் உள்ளது.

ஹூரியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது பாகிஸ்தானை வெகுவாக பாதித்துள்ளது. இச்செயல அவர்கள் அடிப்படை உரிமையை பறிப்பதுபோல் உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்தாகவில்லை. நான் இப்போதுகூட பேச்சுவார்த்தைக்காக டெல்லி செல்ல ஆயத்தமாகவே இருக்கிறேன்.

டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றால், பாகிஸ்தானில் ரா அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாக 3 ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வழங்கவிருக்கிறேன். ஒருவேளை டெல்லி செல்லவில்லையென்றால் அடுத்த மாதம் நியூயார்க்குக்கு பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் வருவாராயின் அப்போது அவரிடம் அந்த ஆதாரங்களை அளிக்க திட்டமிட்டுள்ளேன்.

இந்த பேச்சுவார்த்தையால் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படாவிட்டாலும், பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய முடியும் என நம்புகிறேன்.

பிரதமர் மோடி ஆட்சியில் இருப்பதால், அவர்கள் நிபந்தனையை ஏற்று நாங்கள் பேச்சுவார்த்தைக்கு இணங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், காஷ்மீர் பிரச்சினை இடம்பெறாமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை"

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in