லாக்டவுனுக்கிடையே மீண்டும் தொடங்கியது தேயிலைப் பறிப்பு: திரிபுராவில் 2வது நபருக்கு வைரஸ் தொற்று

திரிபுராவில் விவசாயத் தோட்டப் பணிகள் தொடங்கின. துர்கா பாரி எஸ்டேட்டில் முகக்கவசம் அணிந்து தேயிலை பறிக்கும் ஒரு பெண் | படம்: ஏஎன்ஐ
திரிபுராவில் விவசாயத் தோட்டப் பணிகள் தொடங்கின. துர்கா பாரி எஸ்டேட்டில் முகக்கவசம் அணிந்து தேயிலை பறிக்கும் ஒரு பெண் | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவில் 21 நாள் லாக்டவுனுக்கிடையே தேயிலைப் பறிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன, இங்கு விவசாயப் பணிகள் மீண்டும் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் 1 லட்சம் பேரை பலிகொண்ட நிலையில் அமெரிக்காவிலும் இத்தாலியிலும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஐரோப்பாவில் பெரும் வரலாற்று சேதத்தை ஏற்படுத்திய கரோனா இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 40 பேரை பலிகொண்டு 1000க்கும் மேற்பட்டோரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் ஏற்படுத்திய பாதிப்புகளை ஒப்பிடும்போது இந்தியாவைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கும் நிலையே உள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் இரண்டாவது நபரை நேற்று பாதித்தது. இந்தியாவில் வேறெந்த நாடுகளையும்விட அதிக அளவில் முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டு வருவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திரிபுராவில் கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பிரதமரின் லாக்டவுனைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த விவசாயப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

திரிபுராவில் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள துர்கா பாரி தேயிலைத் தோட்டத்தில் தேயிலை இலைகளை பறித்து பதப்படுத்துதல் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான 21 நாள் லாக்டவுனுக்குமத்தியில் நேற்று பாதி பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கியது.

முகக்கவசம் அணிவது, தவறாமல் கைகளை கழுவுதல், சமூக விலகலை கடைபிடிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேயிலைத் தொழிலாளர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வருகிறோம், மேலும் முகமூடி அணிவது, வழக்கமாக கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in