ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - சில துறைகளுக்கு விதிவிலக்கு; அமைச்சர்கள் திங்கள் அலுவலகம் திரும்ப முடிவு; மத்திய அரசு பரிசீலனை

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - சில துறைகளுக்கு விதிவிலக்கு; அமைச்சர்கள் திங்கள் அலுவலகம் திரும்ப முடிவு; மத்திய அரசு பரிசீலனை
Updated on
1 min read

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை அமல்படுத்தும் அதேவேளையில் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. வரும் 14-ம் தேதியுடன் முழு அடைப்பு காலம் முடிகிறது. ஆனால், இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒடிசாவில் வரும் 30-ம் தேதி வரை முழு அடைப்பு இருக்கும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். இதுபோலவே பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார். , காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை அமல்படுத்தும் அதேவேளையில் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதன்படி விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற உறுதிப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சிறுகடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஊரடங்கு உத்தரவை விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டுமான துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதுபோலேவே அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் திங்கள் முதல் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணியாற்றுவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in