

மேற்கு வங்க மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகளைப் பார்வையிட்ட உளவியல் நிபுணர்கள், அவர்களின் மனவலிமையைப் பரிசோதித்ததாகக் கூறினர்.
உலகெங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலிகொண்ட கரோனா வைரஸ் இந்தியாவிலும் மெல்ல மெல்ல தடம்பதித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 1,035 பேரை புதிதாகப் பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மத்திய சுகாதார அமைச்சகம் கூறிய தகவலின்பவடி, மொத்தம் 166 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. இதில் 16 பேர் கரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கோவிட்-19 நோயாளிகளிடம் மனநோய்க்கான பரிசோதனையை உளவியல் நிபுணர்கள் இன்று நடத்தினர்.
இதுகுறித்து ஏஎன்ஐயிடம் கூறிய உளவியலாளர் டாக்டர் சப்தரிஷி கூறுகையில், ''கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மன வலிமையை நாங்கள் சோதித்தோம். இவர்களுக்கு முன்பே இருந்திருக்கக்கூடிய பிற சிக்கல்கள் குறித்தும் ஆய்வு செய்தோம். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களின் நிலை மேம்பட்டு வருகிறது'' என்றார்.