

லாக் டவுன் காரணமாக ஒயின் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மதுபானங்களுக்குப் பதிலாக கோவா மக்கள் தற்போது யுராக் எனப்படும் பாரம்பரிய பழச்சாறுகளுக்கு மாறியுள்ளனர்.
பல்வேறு வெளிநாட்டவர்கள் வந்து செல்லும் கோவாவில் ஒயின் கடைகளைப் பொறுத்தவரை நம்ம ஊர் பெட்டிக்கடைகளைப் போல தெருவுக்கு நான்கு இடங்களிலாவது சர்வசாதாரணமாக தென்படக் கூடிய ஒன்றுதான். ஆனால் தற்போது கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக் டவுனைத் தொடர்ந்து, கடலோர மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ஒயின் கடைகள் மூடப்பட்டன.
இதன் காரணமாக ஆரம்பத்தில் கோவாவில் உள்ள மதுபானப் பிரியர்கள் மிகவும் திண்டாடினர். ஆனால் தற்போது அந்தக் கவலை அவர்களுக்கு முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏனெனில் ஆரோக்கியமான அதேவேளையில் போதை உணர்வைத் தரும் ஆரோக்கியமிக்க பாரம்பரிய பழச்சாறில் அவர்கள் திளைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்கின்றனர்.
காட்டுப் பழச்சாறு எனப்படும் யுராக் ஒருவகையில் நாட்டு மதுபானமுமாகும். ஆனால் தீங்கு செய்யாத மதுபானம்.
இதுகுறித்து முந்திரிப் பழத்திலிருந்து மதுபானம் தயாரிக்கும் அசோசியேஷனின் நிறுவனத் தலைவர் மேக் வாஸ் கூறியதாவது:
''இந்த நாட்களில் முந்திரிப் பழச்சாறாலான உடலுக்கு ஆரோக்கியமான யுராக் (அராக் அல்ல, அது பட்டை சாராயம்) செய்வதற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனால்தான் மக்கள் எந்த வகையிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத இந்த யுராக்கை வாங்க முயன்று வருகின்றனர். முந்திரி ஆப்பிள் பழச்சாறுகளிலிருந்து தயாரிக்கப்படும் யுராக் வணிக ரீதியாக விற்கப்படவில்லை. ஆனால், கோவாவின் கிராமங்களில் பரவியிருக்கும் கொல்லைப்புறங்களில் இதன் உற்பத்திகள் நடைபெறுகின்றன.
அவை பாட்டில்களில் வைத்து விநியோகிக்கப்படுகின்றன. ஒரு லிட்டர் பாட்டில் யுராக் விலை ரூ.100 ஆகும், மேலும் தேவை அதிகரித்த போதிலும் சாதாரணமாக கோடைக்காலங்களில் கிடைக்கும் இந்த பழச்சாறின் விலையை உயர்த்தப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்''.
இவ்வாறு மேக் வாஸ் தெரிவித்தார்.
பாண்டாவுக்கு அருகிலுள்ள நிரான்கால் நகரைச் சேர்ந்த முந்திரி விவசாயி விகாஸ் பிரபு கூறுகையில், ''யுராக்கின் பெரும்பகுதி வீட்டு உபயோகத்திற்கு வாங்கப்படுகிறது. நீண்ட நாள் எல்லாம் வைத்திருந்து இதைப் பருக முடியாது. இந்த பழச்சாறு பானத்திற்கு நீண்ட ஆயுள் இல்லை. மக்கள் யுராக் (முந்திரிஆப்பிள் அறுவடை) பருவத்திற்காக காத்திருக்கிறார்கள். மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் பாரம்பரிய பானத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. எந்தவொரு நல்ல தரமான பானத்திற்கும் இந்த முந்திரிஆப்பிள் பழச்சாறு கஷாயம் ஒரு வலுவான மாற்றாகும். எல்லாவற்றையும்விட இது மலிவு விலையில் உள்ளது. தேவை அதிகரிப்பது முந்திரி விவசாயிகளுக்கு உதவுகிறது, அவர்கள் முந்திரி ஆப்பிள் பழச்சாறை தங்கள் பண்ணைகளில் வடிகட்டுவதில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.
மதுபானக் கடைகளாலும் வைரஸ் அதிகமாகப் பரவும்
இதற்கிடையில், அனைத்து கோவா மதுபான வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தத்தபிரசாத் நாயக் கூறுகையில், ''அரசாங்கம் திரும்பவும் திறக்கச் சொல்லும்வரை மதுக்கடைகளை மூடி வைக்க வேண்டும். கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறோம்.
கரோனா வைரஸ் பரவலுக்கு ஒயின் கடைகள் காரணமாக இருந்துவிடக்கூடாது. காரணம் இங்குதான் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஏராளமான அளவில் வருகின்றனர். கொடிய வைரஸ் பரவக்கூடிய மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஒயின் கடைகளும் உள்ளன" என்று கூறினார்.