

ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம்- தேதி நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தனர். இதனால் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்வை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் 3-வது மாநிலமாக மகாராஷ்டிராவும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.