

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனால் பெரும் துயரத்தில் இருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு உடனடியாக பணத்தை மத்திய அரசு வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்ய வேண்டும். பிரதமர் மோடியிடம் பேசும்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாரயாணசாமி இதனை வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக் டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.
இந்த லாக் டவுன் காலத்தில் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் போன்றோர் வருமானமில்லாமல் சிரமப்படுவார்கள் என்பதால், அவர்கள் கைகளில் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முன்பே மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த 21 நாட்கள் லாக் டவுன் காலகட்டம் வரும் 14-ம் தேதியோடு முடிகிறது. இந்த லாக் டவுனை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களிடம் கருத்துகளை அறிய இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இ்ந்த சூழலில் பிரதமருடன் உரையாடும் போது மாநில முதல்வர்கள், ஏழைகளின் சூழலை எடுத்துக் கூறி உடனடியாக பணத்தை அவர்களுக்கு வழங்கக் கேட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து:
''மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு உடனடியாக நிதி வழங்க பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
21 நாட்கள் லாக் டவுன் காலத்தில் ஏழைகள் வேலைவாய்ப்பை இழந்து, தங்கள் சேமிப்பையும் செலவு செய்திருப்பார்கள். இப்போது இலவச உணவுக்காக வரிசையில் நிற்கிறார்கள். ஏழைகளின் கைகளில் பணத்தை மத்திய அரசு வழங்க ரூ.65 ஆயிரம் கோடி மட்டுமே தேவைப்படும். இது மத்திய அரசால் சாத்தியமானதுதான்.
முதல்வர்கள் அமரீந்தர் சிங், அசோக் கெலாட், பூபேஷ் பாகல், வி நாராயணசாமி, உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமருடன் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும்போது, ஏழைகளின் உயிரையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எடுத்துக்கூற வேண்டும்.
ஏழைகள் பசியால் உணவுக்காக வரிசையில் நிற்பதை ஒரு நல்ல அரசு பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? ஏழைகள் கைகளில் உடனடியாக பணத்தைக் கொண்டு சேர்ப்பதுதான் முக்கியமான கோரிக்கையாக பிரதமரிடம் வலியுறுத்துங்கள்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.