Published : 11 Apr 2020 11:10 AM
Last Updated : 11 Apr 2020 11:10 AM

கரோனாவினால் பாதிக்கப்படும் பொருளாதார நிலைக்கு உதவ மீண்டும் அழைத்தால் ‘உடனே சரி’ என்பேன்: ரகுராம் ராஜன் 

கோவிட்-19 கொள்ளை நோயினால் சரிவடையும் பொருளாதார நிலைமைகளைச் சரி செய்ய இந்தியா தன்னை மீண்டும் அழைத்தால் நிச்சயம் உடனடியாக ‘சரி வருகிறேன்’ என்று ஏற்றுக் கொள்வேன் என்று முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இவர் சமீபத்தில் எழுதிய வலைப்பதிவில் அனைத்தையும் பிரதமர் அலுவலகத்தையே மையமாகக் கொண்டு செய்வது பயனளிக்காது, துறை சார்ந்த நிபுணர்களை அழைக்க வேண்டும் என்று எழுதியிருந்ததோடு பல பயனுள்ள ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

இந்நிலையில் உலகம் முழுதும் லாக்-டவுன் பாதிப்பினால் அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வேலையின்மைகள் தலைவிரித்தாடுகின்றன.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் இந்தியா இப்போது அழைத்தால் வருவீர்களா என்று கேட்டபோது, ரகுராம் ராஜன், “நேரடியாக சரி என்று கூறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா, இத்தாலி போன்று வைரஸ் பரவினால்.. நாம் இதனை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது பொதுச்சுகாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட பரவலான மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்வது கடினம்.

உலகம் நிச்சயமாக ஒரு பொருளாதார சீரழிவைச் சந்திக்கிறது அடுத்த ஆண்டு மீள முடியுமா என்று பார்க்க வேண்டும். இந்த நோய் மீண்டும் பரவாமல் தடுக்க நாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்ததே பொருளாதார சரிவிலிருந்து மீள்வதையும் தீர்மானிக்கும்.

இந்தியாவில் சிக்கலின் முதல் அறிகுறி அன்னியச் செலாவணியில் இருப்பதாகக் கருதுகிறேன். மற்ற வளரும் சந்தைகளை நோக்குகையில் நம் நாணய மதிப்பு நிலையாகவே உள்ளது. இது ஆர்பிஐ ஆதரவுடன் நடந்துள்ளது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. ஆனால் பிரேசில் போன்ற நாடுகளில் அந்நாட்டு நாணய மதிப்பு 25% சரிந்துள்ளது. நாம் அந்த நிலையில் இல்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x