லாக் டவுன் நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன ஏற்பாடு? மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனின்போது சாலைகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடத்துக்கு என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்று மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

''கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து மக்களும் வீட்டுக்குள் இருக்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் ஆதரவின்றித் தங்கியிருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. இவர்களின் உறைவிடத்துக்கும், உணவுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் லாக் டவுன் நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு எளிதாக கரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளும். அவர்களுக்கு அடிப்படை வசதிகளான தேவையான உணவு, தங்குமிடம், மருத்துவச் சிகிச்சை வழங்கவும், அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுக்காக இந்த லாக் டவுன் நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையாக அடுத்த இரு வாரங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்ய வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in