வாழ்த்துவதற்கு விருந்தினர்களை அழைக்கவில்லை: லாக்டவுனை மதித்து எளிய திருமணம்

விருந்தினர்கள் இல்லாமலேயே நடந்த மகேஷ் மற்றும் சவுஜன்யாவின் எளிய திருமணம் | படம் ஏஎன்ஐ
விருந்தினர்கள் இல்லாமலேயே நடந்த மகேஷ் மற்றும் சவுஜன்யாவின் எளிய திருமணம் | படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

வாழ்த்துவதற்கு விருந்தினர்களை அழைக்காமல் லாக்டவுன் விதிமுறைகளுக்கு உட்பட்டு பெற்றோர் முன்னிலையில் மட்டும் மிக எளிய முறையிலான திருமண நிகழ்வு ஒன்று விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முழு நாடும் 21 நாள் லாக்டவுனில் ஸ்தம்பித்துள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் கோவிட் 19 பரவுவதைத் தடுக்க மக்கள் ஒன்றுகூடுதவற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் அதனை நிறுத்த விரும்பாமல் எளிமையாகவாவது நடத்திவிடுவது என ஆந்திராவைச் சேர்ந்த மணமக்களின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு 11.20 மணியளவில் அனகபள்ளியில் உள்ள என்.டி.ஆர் காலனியில் அமைந்துள்ள மணமகனின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.

லாக்டவுன் காரணமாக விருந்தினர்கள் யாரும் இல்லாமலேயே நேற்று இரவு மகேஷ் மற்றும் சவ்ஜன்யா ஜோடி திருமண உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து மணமகனின் தந்தை கூறியதாவது:

''எனது மகனின் திருமண தேதி நான்கு மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. அதனை நிறுத்தி வைக்கவும் எங்களுக்கு விருப்பமில்லை. அதேநேரம் திட்டமிட்டிருந்ததைப் போல விமரிசையாக நடத்தவும் எண்ணமில்லை. லாக்டவுன் தொடர்பான அரசாங்க உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய நாங்கள் விரும்பினோம்.

எனவே, நாங்கள் எங்கள் வீட்டில் மட்டுமே திருமணத்தை நடத்தினோம். வாழ்த்துவதற்கு எந்த உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கவில்லை. திருமணத்தின் போது ஆறு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு புரோகிதர் மட்டுமே கலந்து கொண்டனர். ''

இவ்வாறு மணமகனிக் தந்தை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in