

கோவிட்-19 மருந்துக் கலவையில் கற்பூரம் இருப்பதாகவும், ஆகையால் கற்பூரத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
இதனால் பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை வாங்கி வருகின்றன. இதனிடையே, கரோனாவுக்கான மருந்துகள் குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"சார்ஸ் கோவி-2 மற்றும் கோவிட்19-க்கான மருந்துகள் பற்றிப் பாருங்கள். அதில் இருக்கும் கலவையில் கற்பூரமும் உள்ளது.
பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் கற்பூரம் மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ப்ளேக், இன்ஃப்ளூயன்ஸா (குளிர் காய்ச்சல்) தொற்று பரவியபோது கற்பூரம் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. கற்பூரத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது பச்சைக் கற்பூரத்தை சக்கரைப் பொங்கலில் சேர்த்து தயார் செய்யுங்கள்.
ஒரு எச்சரிக்கை, இது பரிசோதனைக் கூடங்களில் ஆராய்ச்சி நிலையில் இருப்பவை. இவற்றை அதிகாரிகள் அங்கீகரிக்கும் வரை நேரடியாகச் சாப்பிடக்கூடாது. நமது பாரம்பரிய மருந்தான கற்பூரத்தை சிகிச்சை இல்லாத தொற்றுகளுக்கு மருந்தாக மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதில் பெருமை".
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.