Last Updated : 13 Aug, 2015 04:04 PM

 

Published : 13 Aug 2015 04:04 PM
Last Updated : 13 Aug 2015 04:04 PM

தாஜ்மஹாலுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்

பிரோசாபாத் நகரத்தில் உள்ள கண்ணாடி தொழிற்சாலைகளினால் தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் பிரோசாபாத் நகரம் கண்ணாடிகளுக்கும், வளையல்களுக்கும் புகழ் பெற்றது. இப்போது இந்த கண்ணாடி தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தாஜ் டிரபீசிய மண்டலம் என்று அழைக்கப்படும் இந்த மண்டலத்தில் தாஜ்மஹால் சேர்த்து 40 பாதுக்காப்புக்குரிய நினைவு சின்னங்கள் உள்ளன.

உலகப் புகழ்பெற்ற கண்ணாடித் தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதி 1990ம் ஆண்டுகளிலிருந்து சுற்றுசூழல் தீங்கிற்காக செய்திகளில் அடிபடத் தொடங்கியது.

தற்போது மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்புக்காக இப்பகுதி மீண்டும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆக்ரா நிர்வாகத்துக்கு கண்ணாடித் தொழிற்சாலைகளின் விரிவாக்கம் குறித்து கவலை வெளியிட்டு கடிதம் எழுதியிருந்தது.

இதனையடுத்து புதன்கிழமையன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உத்திரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு தாஜ் டிரபீசியம் மண்டலத்தில் உள்ள பிரோசாபாத் நகர் பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.

இப்பகுதியில் செயல்படும் கண்ணாடித் தயாரிப்பு தொழிற்சாலைகளில் 60 தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி நடத்தப்படுவதாக வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமூக செயல்பாட்டு குழு மனு செய்திருந்தையடுத்து பசுமைத் தீர்ப்பாயம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், குறிப்பிட்ட இந்த தொழிற்சாலைகள் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதாகவும், நிலக்கரிக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும் உத்திரப் பிரதேச அரசு பசுமை தீர்ப்பாயத்துக்கு தெரிவித்திருந்தது.

மேலும், கண்ணாடித் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் தீங்கற்றவை என்றும், கண்ணாடி வளையல்களுக்கு மெருகூட்டப் பயன்படுத்தும் ஃபெரிக் குளோரைடு என்ற ரசாயனம் மட்டுமே தீங்கான ரசாயனம் என்றும் உ.பி.அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் சுற்றுச்சூழல் நடவடிக்கைக் குழுவோ, மூச்சுக்குழலை பாதிக்கும் ரசாயன வெளியேற்றத்தை இந்த கண்ணாடித் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது என்று அரசின் வாதத்தை மறுத்துள்ளது.

இதனையடுத்து தற்போது இந்த தொழிற்சாலைகள் நீடித்தால் தாஜ்மஹால் என்ற வரலாற்று புகழ்பெற்ற நினைவுச் சின்னம் பாதிப்படையலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x