

உலக்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நண்பர்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா எப்போதும் வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்தது.
ஆனால், அமெரிக்கா இலங்கை, நேபாளம், வங்கதேசம், பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, தடைகளை நீக்கியது.
மத்திய அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ, இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தனர். இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு மருந்து மூலப்பொருட்களை வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி எனத் தெரிவித்திருந்தனர்.
இரு நாட்டு அதிபர்களின் நன்றிக்குப் பதில் அளித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோவுக்கு நன்றி. இந்த சவாலான நேரத்தைவிட இந்தியா-பிரேசிலின் கூட்டுறவு வலிமையானது” என பிரேசில் அதிபருக்கு நன்றி தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி அளித்த பதிலில், “இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை இரு நாடுகளும் சேர்ந்து எதர்கொள்வோம். எங்களுடைய நண்பர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.