

உலகம் முழுதும் கரோனா பரவல் உலுக்கி வரும் நிலையில் ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போல் சமூகப் பரவல் கட்டம் இங்கு இன்னும் வரவில்லை, மேலும் கரோனா வைரஸ் பாசிட்டிவ் கேஸ்களில் குறிப்பிடத்தகுந்த அதிகரிப்பு எதுவும் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் நல்ல செய்தி தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 5,865 உறுதி செய்யப்பட்ட கரோனா கேஸ்கள் உள்ளன. 169 பேர் பலியாகியுள்ளனர். இதில் 591 புதிய கேஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 473 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி 1,30,792 தனி நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,44,919 சாம்பிள்கள் இதுவரை சோதனை செய்யப்பட்டன. ”பாசிட்டிவ் விகிதம் 3-5% என்ற அளவில்தான் உள்ளது, குறிப்பிடத்தகுந்த அளவில் கரோனா பாசிட்டிவ் முடிவுகள் அதிகரிக்கவில்லை, புதனன்று 13,143 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டன” என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அதிகாரி மருத்துவர் மனோஜ் முர்ஹேகர் கூறும்போது, குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தும் சோதனைகளுக்கான நடைமுறைகளை இறுதி செய்யும் நிலையில் ஐசிஎம்ஆர் இருப்பதாகத் தெரிவித்தார்.
“இந்த பிளாஸ்மா சிகிச்சையில் வைரஸிலிருந்து மீண்டவர்களின் குருதி அணுக்களை கரோனா தீவிர நோயாளிகளின் உடலில் செலுத்தி மீண்டவர்களின் குருதி அணுக்களின் குறிப்ப்பிட்ட நோய் எதிர்ப்பு ஆற்றல் கரோனாவை எதிர்த்து அழிக்கும் சிகிச்சையாகும். இது வெண்ட்டிலேட்டரில் இருக்கும் ஆபத்தானக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும். இது நல்ல பலன்களை அளிப்பதாக அயல்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்றார் டாக்டர் மனோஜ் முர்ஹேகர்.
இந்திய ரயில்வேஸ் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 6 லட்சம் முகக்கவசங்களைத் தயாரித்துள்ளது, 4000 லிட்டர்களுக்கும் அதிகமாக கை கிருமி நாசினிகளைத் தயாரித்துள்ளது. 5000 ரயில் பெட்டிகளை கரோனா தனிமைப்பிரிவு வசதிகளுக்காக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.